இலங்கையின் மலையகப் பகுதிகள், அதன் அழகிய தேயிலைத் தோட்டங்கள் மற்றும் மலைப்பரப்புகளுக்குப் பெயர் பெற்றவை. எனினும், புவியியல் ரீதியாக, இந்தப் பகுதிகள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய அபாய வலயங்களாகவே காணப்படுகின்றன. அண்மையில் நாட்டைத் தாக்கிய ‘டித்வா’ புயல், மலையகத்தில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புயலால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சேதங்கள், கடந்த காலங்களில் இதே பகுதிகளில் இடம் பெற்ற இயற்கை அனர்த்தங்களின் தீவிரத்துடன் ஒப்பிடுகையில் மிக மோசமான ஒன்றாக உள்ளது.
டிட்வா புயலின் கோரத் தாண்டவம்
‘டித்வா’ (Ditwa) புயல், இலங்கையின் அண்மைக் கால வரலாற்றில் 2004ஆம் ஆண்டு சுனாமிக்குப் பிறகு மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது. மலையகத்தின் பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை மற்றும் கேகாலை போன்ற மாவட்டங்களில் இதன் தாக்கம் கற்பனை செய்ய முடியாத அளவில் பதிவாகியுள்ளது. புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத மழைப்பொழிவு, ஆறுகளில் பாரிய வெள்ளப்பெருக்கையும், மலைப்பகுதிகளில் பாரிய நிலச்சரிவுகளையும் தூண்டியது.
சில பகுதிகளில் 24 மணி நேரத்திற்குள் 500 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவானது. இந்த தீவிர மழைவீழ்ச்சி, மண் ணின் ஸ்திரத்தன்மையை முற்றாகப் பாதித்து, பல கிராமங்களை நிர்மூலமாக்கியது. சமீபத்திய தரவுகளின்படி, டித்வா புயலால் உயிரிழந்தவர்க ளின் எண்ணிக்கை 486ஐத் தாண்டியுள்ளது, மேலும் 340க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
குறிப்பாக, கண்டி மாவட்டத்தில் 118 உயிரிழப்புகளும் நுவரெலியா மாவட்டத்தில் 89 உயிரிழப்புகளும் பதுளை மாவட்டத்தில் 83 உயிரிழப்புகளும் கேகாலை மாவட்டத்தில் 30 உயிரிழப்புகளும் மாத்தளை மாவட்டத்தில் 28 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. அதேநேரம் கண்டி மாவட்டத்தில் 170 க்கும் மேற்பட்டோரும் நுவரெலியா மாவட்டத்தில் 70 க்கும் மேற் பட்டோர் கேகாலை மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்டோரும் காணாமல் போயுள்ளனர். அத்துடன் குறித்த மாவட்டங்களில் ஆயிரக்கணக் கான வீடுகள் முழுமையாகவும் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. பல மாவட்டங்களில் பெருந்தோட்ட பகுதிகளில் காணப்பட்ட கிரா மங்களுடனான தொடர்புகளும் துண்டிப்படைந் துள்ளன.
ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் கணிசமான பகுதியினர், நிலப்பாதுகாப்பற்ற, செங்குத் தான சரிவுகளில் உள்ள தோட்டப் புறங்களில் வாழும் மலையகத் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் வாழ்வாதாரம், வீடுகள் மற்றும் சமூகக் கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக் கப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டு, பல பகுதிகள் உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டன.
கடந்த கால அனர்த்தங்களின் பின்னணி
மலையகப் பகுதிகளில் இயற்கை அனர்த்தங்கள் என்பது புதிய விடயமல்ல. 1974ஆம் ஆண்டு முதல், இலங்கையின் காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட தீவிர மழைவீழ்ச்சி சம்பவங்கள் இந்தப் பகுதிகளைத் தொடர்ந்து தாக்கி வருகின்றன. குறிப்பாக, பருவமழை காலங்களில் ஏற்படும் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் போன்றன பொதுவானவை.
உதாரணமாக 2016ஆம் ஆண்டு அரநாயக்க நிலச்சரிவை குறிப்பிட முடியும். கேகாலை மாவட்டத்தில் உள்ள அரநாயக்க மற்றும் புலத்கோஹுபிட்டிய ஆகிய இடங்களில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவுகளில் 150க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். குறுகிய காலத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டது.
அதேநேரம் 2017ஆம் ஆண்டு பல வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்கள் பதிவாகின இந்தப் பேரிடரில் 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன, 219 இறப்புகள் மற்றும் 74 பேர் காணாமல் போனதாக தரவுகள் உள்ளன. இதுவும் பிரதானமாக தென்மேற்கு பருவமழையினால் ஏற்பட்ட பாரிய மழைப்பொழிவின் விளை வாகும். எவ்வாறினும் மேற்கூறிய குறித்த அனர்த்தங்களுடன் ஒப்பிடும்போது டிட்வா புயல் பாரிய அளவில் வேறுபட்டு காணப்படு கிறது. டிட்வா புயலின் தாக்கத்தை கடந்த கால நிகழ்வுகளுடன் ஒப்பிடும்போது சில முக்கிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. உயிரிழப்புகளின் எண்ணிக்கையை நோக்கும் போது டிட்வா புயலினால் ஏற்பட்ட தற் போதைய உயிரிழப்பு எண்ணிக்கையான 486 என்பது, 2016 அல்லது 2017ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட தனித்தனி அனர்த்தங்களின் மொத்த உயிரிழப்புக்களை விட மிக அதிகமாக உள்ளது.
அதேபோன்று மழைப்பொழிவு தீவிரம் தன்மையை நோக்கும் போது டிட்வா புயலின் போது சில இடங்களில் பதிவான மழைப்பொழிவு அளவான 540 மில்லிமீற்றர் என்பது, முந்தைய பல சம்பவங்களில் சராசரி மழைவீழ்ச்சி அளவை விட மிக அதிகமாகும். அதேபோன்று கடந்த கால அனர்த்தங்கள் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மாத்திரம் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், டிட்வா புயல் 22 மாவட்டங்களைப் பாதித்துள்ளது. இது ஒரு பரவலான தேசிய நெருக்கடியை எடுத்து காட்டுகிறது. வரலாற்று ரீதியாக, மலையகப் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்ட குடியிருப்புகள், நிலப்பாதுகாப்பற்ற சரிவுகளில் அமைந்துள்ளதால், ஒவ்வொரு தீவிர மழைப்பொழிவின் போதும் அதிக ஆபத்துக்கு உள்ளாகின்றன. இந்த கட்டமைப்பு ரீதியான பாதிப்பு, டிட்வா புயலின் போதான பேரழிவின் தீவிரத்தை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
அரசாங்கத்தின் உடனடி செயற்பாடுகள்
டித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஈடுசெய்ய இலங்கை அரசாங்கம் பல அவசர மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதில் உடனடி நிவாரணம் மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவை அடங்குகின்றன.
புயலால் ஏற்பட்ட பாரிய அனர்த்தங்களை எதிர்கொள்ள அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்துள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலதிகமாக 550 மில்லியன் ரூபா ஒதுக்கப் பட்டுள்ளது.
அதேநேரம் புயலால் ஏற்பட்ட பெரும் சேதங்களுக்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்துடன், “Rebuilding Sri Lanka” என்ற பெயரில் ஒரு நிதியத்தை நிறுவ அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கையை நிலைப்படுத்தத் தேவையான அவசர நிவார ணம் மற்றும் அத்தியாவசிய வசதிகளை வழங்குவது குறித்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு திறைசேரி செயலாள ரின் அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
இதேவேளை, அரசாங்கம் சர்வதேச உதவி களையும் நாடியுள்ளது. இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு இராஜ்ஜியம், மாலைத்தீவு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற நாடுகள் மற்றும் அமைப்புகள் உணவுப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள், நீர் சுத்திகரிப்பு கருவிகள் மற்றும் நிதி உதவிகளை வழங்கியுள்ளன. அனர்த்த நிவாரணத்திற்கான தேவையான கொள் முதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பிரதம செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
புனரமைப்புப் பணிக ளுக்கு முன்னுரிமை அளித்து, முக்கிய அமைச் சர்களின் பங்கு பெற்றதுடன் உயர்மட்டக் குழுவை அரசாங்கம் நிறுவியுள்ளது.
எவ் வாறாயினும் அரசாங்கத்தின் செயல்பாடுகள் மீதும் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக இவ்வாறானதொரு புயல் தாக்கம் ஏற்படும் என முன்கூட்டியே வளிமண்டலவியல் திணைக்களத்தினால் அறிவு றுத்தப்பட்ட போதிலும் அதற்கேற்ப முன்னாயத்த நடவடிக்கைகள் எதனையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்க்
கட்சிகள் முன்வைத்துள்ளன. 500 மில்லி மீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூ டும் என்ற எதிர்வுகூறல் காணப்பட்ட நிலையில் முன்கூட்டிய செயற்பாடாக நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளை திறப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாகவும் திடீரென வான்கதவுகளை திறந்து விட்டதன் காரணமாக மலையகத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு சம்பவங்கள் ஏற்பட்டதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டு
கின்றன.
அதேபோன்று பாதிக்கப்பட்டோரின் தரவுகளை சேகரிப்பதற்காக கிராம உத்தியோ கத்தர் மட்டத்தில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன்படி அனர்த்த நிவாரணங்களுக்காக ஒவ்வொரு கிராம உத்தியோகத் தருக்கும் ஒரு தொகை நிதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் 150 முதல் 300 குடும்பங்களுக்கு ஒரு கிராம உத்தியோகத்தர் உள்ள நிலையில் மலையகப் பகுதிகளில் 3000 குடும்பங்களுக்கு ஒரு கிராம உத்தியோத்தர் என்ற நிலையே காணப்படுகிறது. அப்படியா யின் மலையகப் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப் புகளுக்கான நிவாரணங்களை வழங்குவதில் பாரிய பாரபட்சம் ஏற்படும். இந்த அடிப் படையில் டிட்வா புயல், இலங்கையின் மலை யகப் பகுதிகளின் சுற்றுச்சூழல் ரீதியான பாதிப் புக்குள்ளாகும் தன்மையையும், காலநிலை மாற்றத்தின் கடுமையான விளைவுகளையும் கண்முன்னே நிறுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் இருந்து போதுமான பாடங்களைக் கற்று, நிலப்பாதுகாப்பு, ஆரம்ப எச்சரிக்கை பொறிமுறைகள் மற்றும் பாதுகாப் பான மீள்குடியேற்றத் திட்டங்களை அரசாங்கம் உடனடியாகச் செயல்படுத்தா விட்டால், எதிர் காலத்திலும் இதுபோன்ற நெருக்கடி நிலைக்கு நாடு மீண்டும் மீண்டும் ஆளாக நேரிடும். இந்த அனர்த்தம், மலையக மக்களின் பாதுகாப்பற்ற வாழ்விடப் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டிய அவசரத் தேவையை வலியுறுத்துகிறது”




