இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22 இலட்சம் என புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் அவர்களுள் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 இலட்சம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த புள்ளிவிபரங்களின்படி, சூறாவளியின் தாக்கத்தினால் அனர்த்தத்திற்கு உள்ளான குடும்பங்களின் எண்ணிக்கை 495,000 என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த அனர்த்த நிலைமை காரணமாக, இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ள சடலங்களின் எண்ணிக்கை 634 என்றும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 211 என்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலகங்கள் அறிவித்துள்ளன.
எனவே, மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மேலும் சடலங்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட சில பிரிவினர் அனர்த்தத்திற்குள்ளான பகுதிகளிலிருந்து வெளியேறுவதை நிராகரித்துள்ளனர் என்றும், அவர்களை அப்பகுதிகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற அரசாங்கம் எந்தவொரு ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் குறிப்பிடப்படுகிறது.
இருப்பினும், இந்த அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட சில பிரிவினர் தொடர்ந்து தமது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்



