ஜெனிற்றாவை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் – பேர்ள் அமைப்பு கோரிக்கை

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவி சிவானந்தன் ஜெனிற்றாவை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என இலங்கையில் சமத்துவம் மற்றும் நீதிக்கான மக்கள் அமைப்பான பேர்ள் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வவுனியாவுக்கான ஜனாதிபதியின் பயணத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சார்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கைகளை முன்வைக்க முயன்றவேளை அவர் கைது செய்யப்பட்டார் என பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது.

காணாமல்போனவர்களின் உறவுகளும் ஏனைய பல தமிழ் சிவில் சமூக அமைப்புகளும் நிராகரித்துள்ளபோதிலும் இலங்கை அரசாங்கம் உண்மை ஐக்கியம் நல்லிணக்க ஆணைக்குழு குறித்த வர்த்தமானியை வெளியிட்ட அதே வாரத்தில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பேர்ள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைஅரசாங்கம் நல்லிணக்கம் குறித்து கவனம் செலுத்துவதாக தெரிவிக்கின்ற போதிலும் பொலிஸார் தொடர்ந்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை துன்புறுத்துகின்றனர் – அச்சுறுத்துகின்றனர் – அவர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுகின்றனர் எனவும் பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் இதற்கெல்லாம் அஞ்சாமல் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் தொடர்ந்தும் தங்கள் நேசத்திற்குரியவர்கள் எங்கே என கேள்வி எழுப்பி வருகின்றனர் என்றும் பேர்ள் அமைப்பு கூறியுள்ளது.