ஜனாஸாக்களை புதைப்பதற்கு மன்னார், அம்பாறையில் இடம் – அமைச்சர் வாசுதேவ தகவல்

இஸ்லாமியர்களின் ஜனாஸாக்களை புதைப்பதற்கு வடக்கில் மன்னாரிலும், கிழக்கில் அம்பாறையிலும் இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான ஓர் அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொவிட் – 19 நோயால் உயிரிழந்த இஸ்லாமியர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய பொருத்தமான நிலத்தைத் தேடுவது தொடர்பாக நிலத்தடி நீர் மட்டத்திற்கு ஆழமான இடத்தைக் கண்டுபிடிக்குமாறு கேட்கப்பட்டது.

இதற்கமைய நீர்வழங்கல் அமைச்சின் புவியியலாளர் ஓர் ஆய்வு செய்து ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார். அதன்படி மன்னாரில் மறிச்சுக்கட்டி மற்றும் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை இறக்காமம் ஆகிய இரு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தரை மட்டத்தில் இருந்து 30 அடி ஆழத்தில் கூட தண்ணீரைக் கண்டுபிடிக்க முடியாது என்று நீர்வழங்கல் அமைச்சர் கூறினார்.

இந்த அறிக்கையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பித்ததாக அமைச்சர் நாணயக்கார மேலும் தெரிவித்தார்.