கண்டி மற்றும் கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகைகளைத் தவிர, நாட்டின் ஏனைய அனைத்து ஜனாதிபதி மாளிகைகளும் மக்களின் நலனுக்காக சிறந்த முதலீட்டு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளன என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அவர் நெடுந்தீவுக்கு அண்மையில் மேற்கொண்ட விஜயத்தின் போது, மக்கள் அமைப்புகள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ஊழல்வாதிகளுக்கும் மோசடியாளர்களுக்கும் தப்பிக்க இடமில்லை. சட்டம் தனது பாதையில் செயல்படும்; அரசியல் தலையீடு இருக்காது.
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் கட்டம் கட்டமாக நிறைவேற்றப்படும். ஐந்து ஆண்டுகளுக்குள் அனைவருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றார்.
மேலும், வறுமையை ஒழிக்க “சமூக சக்தி” வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அது அரசியல், பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டை நோக்கி பயணிக்கிறது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.