ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவேண்டிய 37 கைதிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை

ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவேண்டிய 37 கைதிகள் விடுவிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிறைக் கைதிகளை விடுவிப்பது குறித்து விசாரணையை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வுத் துறையினர் இதனை கண்டறிந்துள்ளனர்.

விசாரணையாளர்கள், கடந்த வாரம், 28 சிறைச்சாலைகளின் பதிவேடு அறைகளை ஆய்வு செய்து சிறைக் கைதிகளின் விபரங்களைப் பெற்றுக்கொண்டனர்.இதன்படி, ஜனாதிபதி மன்னிப்பு பெற்ற 37 கைதிகள் விடுவிக்கப்படவில்லை என்றும், ஒரு கைதி தவறாக விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

விடுவிக்கப்பட வேண்டிய 37 கைதிகள் இன்னும் சிறைச்சாலைகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், விசாரணையாளர்கள், நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வரையிலான காலப்பகுதியில் ஜனாதிபதி மன்னிப்பு மற்றும் பிற பொது மன்னிப்புகளின் கீழ் சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில், முழுமையான மதிப்பாய்வை மேற்கொள்ளவுள்ளார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.