இலங்கையின் 9ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் நாளை (21) நடைபெறவுள்ள நிலையில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் குறித்த வாக்கெடுப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் இன்று (20)அனுப்பி வைக்கப்பட்டன.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் பணிகள் இன்று (20) காலை 8 மணியிலிருந்து ஆரம்பமானது. இத்தேர்தல் மாவட்டத்தில் 528 வாக்களிப்பு நிலையங்களில் 555,432 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
அதன்படி அம்பாறை தொகுதியில் 188,222 பேர், சம்மாந்துறை தொகுதியில் 99,727 பேர், கல்முனை தொகுதியில் 82,830 பேர், பொத்துவில் தொகுதியில் 184,653 பேர் வாக்களிக்கவுள்ளனர்.
மேலும், அம்பாறை மாவட்டத்தில் அம்பாறையில் 184 வாக்களிப்பு நிலையங்கள், சம்மாந்துறையில் 93 வாக்களிப்பு நிலையங்கள், கல்முனையில் 74 வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் பொத்துவில் தொகுதியில் 177 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் குறித்த வாக்கு பெட்டிகளானது திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் வைத்து அனுப்பும் நடவடிக்கை இடம்பெற்றது.
மொத்தமாக 318 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன. மொத்தமாக திருகோணமலை மாவட்டத்தில் 315,925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்று காலை 8 மணியிலிருந்து ஆரம்பமானது.யாழ்.மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களில் 4 இலட்சத்து 92 ஆயிரத்து 280 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குபெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில் காவல்துறை பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது.
வாக்களிப்பு நிலையத்தில் செப்டம்பர் 21ஆம் திகதி காலை 07 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பிக்கப்படும். பிற்பகல் 04 மணிக்கு வாக்களிப்பு நிலைய வரிசையில் தரித்து நிற்கின்ற வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை பிற்பகல் 04 மணிக்கு பின்னர் வாக்களிப்பு நிலையத்தினுள் உட்பிரவேசிக்க இடமளிக்கமாட்டது எனத்தெரி இக்கப்பட்டுள்ளது.