யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழி விவகாரம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படுமானால், சாட்சியமளிக்க தாம் தயாரென தெரிவித்துள்ள சோமரத்ன ராஜபக்ஷவை சந்திப்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள அவர், தமது மனைவியின் ஊடாக வெளியிட்டுள்ள கடிதம் தொடர்பாக கருத்துரைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் சட்டத்தரணி ஜெகநாதன் தர்பரன் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவியின் கோரிக்கையை ஏற்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, உண்மையை நிரூபிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், சோமரத்ன ராஜபக்ஷவுக்கு, சிறைக்குள் விசேட பாதுகாப்பு உடன் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தமது பேஸ்புக் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
கிருஷாந்தி குமாரசுவாமி மட்டுமல்ல, இன்னமும் பல நூற்றுக் கணக்கானோர் கொலை செய்யபட்டனர்.
இதனை தாம் 1998 ஆம் ஆண்டு, தமது சாட்சியத்தில் கூறியதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஆகவே, சர்வதேச கண்காணிப்பு விசாரணைக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, உடன்பட வேண்டும் என்றும், அதிலே சோமரத்ன ராஜபக்ஷ சுதந்திரமாக சாட்சியம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், இவற்றுக்கு முன், சிறையில் இருக்கும் சோமரத்ன ராஜபக்ஷவுக்கு, உடனடியாக அதி உயர் விசேட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் பாரளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சாட்சி விசாரணை இடம்பெறுமாயின் தமது கணவர் சாட்சியமளிக்க தயாராக இருக்கிறார் என்று தெரிவித்து சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்
எவ்வாறாயினும் குறித்த கடிதம் இதுவரையில் தமக்கு கிடைக்கவில்லை என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.



