செம்மணி மனித புதைகுழி அகழ்வு சர்வதேச மேற்பார்வையில் மேற்கொள்ள வேண்டும் : காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுகள்  சர்வதேச கண்காணிப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என வட,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கலாறஞ்சினி  தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள  ஆக்கப்பட்டோரின் உறவுகளினுடைய அலுவலகத்தில் புதன்கிழமை (04)  நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

இதன்போது  காலத்துக்கு காலம் பல்வேறு மனித புதை குழிகள் கண்டு கண்டுபிடிக்கப்பட்டு அகழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

ஆனால் அவை அவ்வாறே விடப்பட்டிருக்கின்றது. இவ்வாறு செம்மணி புதை  குழியிலும் மனித எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டிருக்கின்றன.

எனவே, இவ்வாறான அகழ்வு பணிகள் ஒரு  சர்வதேச  கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன்  ஊடகவியலாளர்கள், காணாமலாக்கப்பட்டவர்கள் சார்பிலும் அவர்களது பிரதிநிதிகளையும் அனுமதிக்க வேண்டும்  என்று குறிப்பிட்ட அவர் தொடர்ந்து குறித்த அகழ்வு பணிக்கு நீதி கோரி வியாழக்கிழமை (05) பகல் செம்மணி சந்தியில் கவனயீர்ப்பு  போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.