இலங்கையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி, சட்டவிரோதமாகவோ அல்லது இரகசியமாகவோ உடல்கள் புதைக்கப்பட்ட இடமாக இருக்கலாம் என அகழ்வுகளை மேற்கொள்ளும் நிபுணர்கள் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி, மயானத்தை ஒரு மனிதப் புதைகுழியாக அறிவிக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (ஜூன் 6) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் மற்றும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா ஆகியோர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு இந்த விடயத்தை தெரிவித்தனர்.
மனித உடல்கள் அந்த இடத்தில் குழப்பமான சூழலில் அல்லது குழப்பமான முறையில் புதைக்கப்பட்டுள்ளதாகவும், இது அகழ்வினை வழிநடத்தும் இரண்டு முக்கிய அரச அதிகாரிகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சட்டத்தரணி ரணிதா ஞானராஜா குறிப்பிட்டுள்ளார்.
40 நாட்களுக்கு அகழ்வுப் பணிகளைத் தொடர தேவையான நிதி ஒதுக்கீடுகளைப் பெறுவதற்குத் தேவையான செயல்முறையை விரைவாக மேற்கொள்ளுமாறு, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனுக்கு அறிவுறுத்தியுள்ளார்.



