செம்மணி: உண்ணாவிரதப் போராட்ட நிறைவில் ஐ.நாவுக்கான அறிக்கை தீ வைப்பு!

IMG 20251001 WA0050 செம்மணி: உண்ணாவிரதப் போராட்ட நிறைவில் ஐ.நாவுக்கான அறிக்கை தீ வைப்பு!

செம்மணியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி நடத்தப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று நிறைவுக்கு வந்தது.

இறுதி நாளான இன்று  சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் பாரிய தீப்பந்தப் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் கடந்த 25ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தது.

வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்ககள், சிறிலங்காவில் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழ் இனவழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் போர் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம், படுகொலை செய்யப்பட்ட பாலச்சந்திரனுக்கு நீதி வேண்டும், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் உள்ளிட்ட கோசங்களை எழுப்பியிருந்தனர்.

இப்போராட்டத்தில் அறிக்கை ஒன்று வாசிக்கப்பட்டு அந்த அறிக்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கபபடவுள்ள அதேவேளை, இலங்கை அரசாங்கத்தினைக் காப்பாற்றும் வகையில் ஐ.நா வினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் மூலம் தமிழர்களுக்கு எந்த நீதியும் வழங்கப்படப்போவதில்லை எனும் அடிப்படையில் குறித்த அறிக்கை போராட்டக்காரர்களால் தீ வைத்துக் கொழுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.