செம்மணி அகழ்வுக்காக 11.7 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அரசாங்கம் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வுக்காக 11.7 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மனித புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு அரசாங்கம் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றும் நீதி அமைச்சர் கூறியுள்ளார்.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் ஒத்துழைப்புடன், அரசாங்கம் தற்போது நாடு முழுவதும் 14 பாரிய புதைகுழிகள் குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரழிவு மரணங்கள், காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் இழப்புகளை அனுபவித்தவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான முழுமையான அரசியல் ரீதியிலான விருப்பம், தற்போதைய அரசாங்கத்திடம் உள்ளதாக நீதி அமைச்சர் கூறியுள்ளார்.

அந்தவகையில், மனித புதைகுழி விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று 18ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டன.
அதற்கமைய, இன்றைய தினம் (23) 5 மனித என்புகூடுகள் அடையாளம் காணப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார். அதன்படி, செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து இதுவரையிலும் அடையாளம் காணப்பட்ட மனித என்புக்கூடுகளின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இதுவரையில் 67 என்புக் கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.