செம்மணியில் மேலும் பல இடங்களில் மனித எச்சங்கள் உள்ளமை ஆய்வில் கண்டறிவு

யாழ்ப்பாணம், செம்மணி-சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் மேலும் பல இடங்களிலும் மனித எச்சங்கள் இருப்பது ஸ்கேன் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு புதைகுழிகள் அடையாளப்படுத்தப்பட்டு அந்த இடங்களில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜீ.பி.ஆர் ரக அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு முன்னதாக பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரப்பட்டது.

எனினும் அதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை. இதனையடுத்து, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்த ஸ்கேன் இயந்திரத்தை பெற்று ஆய்வுப் பணிகள் நடத்தப்பட்டன.
இதன்போதே, பல இடங்களிலும் மனித எச்சங்கள் காணப்படுவதை ஸ்கேன் இயந்திரம் அடையாளப்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வீ.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சான்றுப்பொருட்களை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்று (05) பிற்பகல் 1.30 முதல் மாலை 5 மணி வரை சித்துப்பாத்தி வளாகத்தில் மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.

இதன்போது, தமது உறவுகளை தொலைத்தவர்கள் எவ்வித அச்சமுமின்றி சித்துப்பாத்தி வளாகத்துக்கு சென்று, அடையாளங்களை உறுதிப்படுத்த முடியும் என்று சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழாம், நேற்று (04) சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்திற்கு சென்று, நிலைமைகளை ஆராய்ந்தது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் அடங்களாக குறித்த குழாம் இந்த கள விஜயத்தில் பங்கேற்றது.

இந்த நிலையில், சித்துப்பாத்தி மனித புதைகுழி தொடர்பில் யதார்த்தப் பூர்வமாக அறிக்கையிடல்களை முன்னெடுக்க வேண்டும் என்று கள விஜயத்தில் ஈடுபட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் தங்கமுத்து தனராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.