செம்மணியில் இன்றும் 7 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிப்பு

செம்மணி – சித்துப்பாத்தி பகுதியில் அடையாளம் காணப்பட்ட இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் (29) புதிதாக 7 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட மனித என்புக்கூட்டுத் தொகுதிகளில் 3 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டத்தின் முதலாம் அமர்வில் 15 நாட்கள் அகழ்வு முன்னெடுக்கப்பட்டதுடன், இரண்டாம் அமர்வு இன்றுடன் 9 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைய, குறித்த 9 நாட்களில் மொத்தமாக 34 என்புக் கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.இதுவரையில், மொத்தமாக 111 என்புக் கூட்டு தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 99 என்புக்கூடுகள் முழுமையான அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.