யாழ்ப்பாணம் – செம்மணியில் எழு மனித மண்டையோடு உள்ளிட்ட உடலங்களின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – செம்மணி சிந்த, -இந்து மாயானத்தில், அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுவரும் மனிதப் புதைகுழியில், எழுமாற்றாகத் தோண்டப்பட்ட போது நான்கு வெவ்வேறு இடங்களில் நேற்று 07 மண்டையோடுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.
செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேசசபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனிதச் சிதிலங்கள் பல மீட்கப்பட்டிருந்தன. அந்த மனிதச் மனிதச் சிதிலங்கள் 1995,1996ஆம் ஆண்டுகளில் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி நீதிவான் மேற்கொண்ட ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து, மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஸ்கான் ஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
மே மாதம் 15ஆம் திகதியளவில் இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இரு நாள்கள் அகழ்வின் பின்னர் மழை காரணமாகப் பணிகள் கைவிடப்பட்டன. நேற்றையதினம் மீண்டும் அகழ்வுகள் இடம்பெற்றன. ஆனால், ஏற்கனவே அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற பகுதியில் தண்ணீரும் சேறும் இருந்ததால் குறித்த புதைகுழியின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று எழுமாற்றாக அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போதே, நான்கு பகுதிகளில் மண்டையோடுகளும், இன்னும் சில மனிதச் சிதிலங்களும் அவதானிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நீதிவான் ஆ.ஆனந்தராஜா அகழ்வுப் பணிகளைக் கண்காணித்துவருகின்றார். காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி நிறஞ்சன், சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர் ஆகியோரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



