அண்மைய நாட்களாக தமிழர் அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ள விடயம் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் முன்னெடுத்த தமிழ்க் கட்சிகளை ஒரு தளத்தில் கொண்டுவருவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி தான்.
குறிப்பாக, தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள கட்சிகள் எனப்படுகின்ற இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய தரப்புக்களை ஒன்றிணைத்து பொதுநிலைப்பாட்டை எட்ட வைப்பது தான் அந்த முயற்சியின் இலக்காக உள்ளது.
அப்படிப் பார்க்கையில் இதுவொரு நல்ல விடயம் தானே. ஏனென்றால் புலம்பெயர் அமைப்புக்களும் சரி, தாயகத்தில் உள்ள சிவில் அமைப்புக்களும் சரி மேற்படி மும்மூர்த்திகளையும் ஒருதளத்தில் கொண்டுவருவதற்கு எடுத்த முயற்சிகள் கையறு நிலையை அடைந்துவிட்டன.
சுவிட்சர்லாந்து பொதுவானதொரு நாடு என்ற அடிப்படையில் அந்நாட்டின் தூதரகம் எடுத்துள்ள முயற்சி வரவேற்கத்தக்கது தான். பிறகென்ன உடனடியாக அந்த முயற்சிளை வெற்றிபெறச் செய்வதற்கான அழுத்தங்களை அளித்து விடலாம் தானே என்று பலரும் சிந்திக்கலாம்.
ஆனால் விடயத்தினை சற்று ஆழமாக தேடிப் பார்க்கின்றபோது வெளிக்கிளம்பும் விடயங்கள் மெல்ல மெல்ல சந்தேகங்களையும் அச்சங்களையும் ஏற்படுத்துவ தாக உள்ளன. அத்துடன் சுவிட்சர்லாந்தின் ‘நடுநிலை’ தொடர்பிலும் கேள்விகளை தொடுக்க வைக்கின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னரான புதிய அரசியல் சூழலில், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அனைத்து தமிழ் கட்சிகளாலும் ஏற்றுக்கொண்ட ஏக வரைபடமாக மாற்றுவதற்குத் அவற்றை ஒரு மேசைக்குக் கொண்டுவர வேண்டியது அவசியம் தான்.
அந்த நிலைப்பாட்டில் தான் எதிர்வரும் பெப்ரவரி 19 ஆம் திகதி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே முக்கியதொரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பு பற்றி கொழும்பிலிருந்து வெளி யாகும் தேசிய தமிழ் பத்திரிகை முதலில் செய்தி வெளி யிட்டது. ஆனால் இந்த முயற்சி தொடக்கத்திலேயே முடங்கியிருக்கிறது. இந்த முயற்சி முடங்கியமைக்கு பத்திரிகை செய்தி தான் காரணம் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அடுத்த இருபத்து நான்கு மணிநேரத்துக் குள் குறித்த முயற்சி சீர்குலைந்ததற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே காரணம் என்று கூறப்டுகின்றது. இதற்குள் சுமந்திரனின் வகிபாகம் இருப்பதாக மற்றொரு பக்கம் சொல்லப்படுகின்றது.
ஆனால் இந்த முரண்பாட்டின் பின்னணியில் சுவாரசியமான ‘அரசியல் சதுரங்கம்’ ஒளிந்துள்ளது. சுவிட் சர்லாந்தின் சந்திப்புக்கு முன்னதாக, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, அனைத்துத் தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளை யாழ்ப்பாணத்தில் ஒரு சந்திப்புக்கு அழைத்திருந்தது.
இந்தச்சந்திப்பு நாளை 15ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நடைபெற இருக்கிறது. இந்தச் சந்திப்பை ஒரு ‘காரணமாகக் காண்பித்து’, சுமந்திரன் தரப்பு சுவிஸ்சர்லாந்து தூதரகக் கூட்டத்தை நிறுத்துமாறு கோரியதாகத் தான் சொல்லப்படுகிறது. அந்த வகையில் சுவிட்சர்லாந்து தமிழ்க் கட்சி களை ஒருதளத்துக்கு கொண்டுவரும் விடயத்தில் கள மிறக்குவதற்கு காரணம், சுமந்திரனும், சத்தியலிங்கமும் தான். பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கடந்த ஆண்டு செப்டெம்பர் 18ஆம் திகதி சுவிட்சர்லாந்துக்குச் சென்றிருந்தது
இந்தக்குழுவில் ஆளும் எதிர் அணிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்ததோடு சத்தியலிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டவர்களும் உள்ளடங்கியிருந்தனர். குறித்த குழுவானது, சுவிட்சர்லாந்தில் கூட்டாட்சி தத்துவங்கள் உள்ளிட்ட விடயங்கள் பற்றிய அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவே சென்றிருந்தார்கள்.
இதன்பின்னணியில், குறித்த விஜயத்தில் பங்கேற் றிருந்த சத்தியலிங்கம் கஜேந்திரகுமாருடன் பல்வேறு சந்திப்புக்களை அந்த விஜயத்தினுள்ளே நடத்தியிருந்த நிலையில் நாடு திரும்பியதும் அனைத்து தரப்பினையும் ஒன்றிணைக்கும் செயற்பாட்டுக்கு உயிர்கொடுக்கும் வகையில் கஜேந்திரகுமாரை உள்ளீர்ப்பதற்கு சுவிட்சர்லாந்து தலைமையில் நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
அதற்கமைய ஏற்பாடுகள் சுவிட்சர்லாந்தின் தரப் பிலிருந்து தடாலடியாக நடைபெற்றன. அதன்படி, இலங் கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் பொதுச்செயலாளர் சுமந்திரன், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரனும் பிறிதொருவரும், தமிழ்த் தேசிய மக்கள் மன்னணியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பிறிதொருவரும் பங்கேற்பதாக இருந்தது.
எனினும் குறித்த பட்டியலுக்குள் சிவஞானம் சிறிதரன், கலாநிதி.குமாரவடிவேல் குமரகுருபரன் ஆகியோ ரும் உட்புகுத்தப்பட்டனர். இரண்டுமே சுவிட்சர்லாந்தின் தனிப்பட்ட விருப்பில் உட்புகுத்தப்பட்ட பெயர்கள் என்று கூறப்படுகின்றது. ஆனால் மறுபக்கத்தில் குறித்த பெயர்களை உள்ளீர்ப்பதில் கஜேந்திரகுமாரின் ‘கை’ ஓங்கியிருந்ததாகவும் சொல்லப்படுகின்றது. ஏனென்றால் குறித்த சந்திப்பு தமிழரசுக்கட்சியின் கோரிக்கையில் தான் நடைபெறுகின்றது என்பதை கஜேந்திரகுமார் அறிந்திருந்தார்.
அவ்வாறான நிலையில் பேச்சு மேசைக்குச் சென்றதும் சிலவேளைகளில் சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவோல்ட் எந்த அடிப்படையில் அரசியல் தீர்வு விடயத்தில் இணைந்து செயற்படப்போகின்றீர்கள் என்று கேள்வி எழுப்பினால் அதற்கு சுமந்திரன் உடனடியாகவே 2016-2018ஆம் ஆண்டு வரையில் புதிய அரசியலமைபபை உருவாக்குவதற்காக தயாரிக்கப்பட்ட ‘இடைக்கால அறிக்கை’ உள்ளது என்று பதிலளிப்பார்.
ஆனால் கஜேந்திரகுமாரைப் பொறுத்தவரையில் இடைக்கால அறிக்கையை அவர் முழுமையாக நிராகரிக் கிறார். அது ஒற்றையாட்சியை மையப்படுத்திய ஏக்கிய இராச்சிய இடைக்கால அறிக்கை என்றும் பெயர்பலகையின் பெயரால் கண்ணைப் பொத்தி அடிக்கும் விளையாட்டு என்றும் விமர்சிக்கிறார். ஆனால் அதனை தூதுவரிடத்தில் அச்சமயத்தில் அவரால் சொல்லமுடியாத தர்மசங்கட நிலைமை இருக்கலாம்.
ஆகவே தூதுவர் முன்னிலையில் அவர் ஜனநாயக அடிப்படையில் அந்தநிரகாரிப்பை காண்பிப்பதாக இருந் தால் தன்னோடு சிலரும் அவசியமாகின்றது. அந்த அடிப்பையில் சிறீதரன் எம்பியும் குமாரவடிவேல் குருபரனும் உள்ளீர்க்கப்பட்டிருக்கலாம்.
அதுவொருபுறமிருக்கையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 15ஆம் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அவசரம், இடைக்கால அறிக்கையை தமிழ் அரசியல் கட்சிக ளும், சிவில் அமைப்புக்களும் நிராகரிக்கின்றன என்பதை வெளிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது.
அதன் காரணமாகவே கஜேந்திரகுமார் பொன்னம் பலம் 15ஆம் திகதி பொதுக்கூட்டத்தினை நடத்துவதாக அறி வித்திருக்கிறார். மறுபக்கத்தில் சி.வி.கே.விரும்பாத குமரவடிவேல் குருபரன், சுமந்திரன் விரும்பாத சிறீதரன் ஆகியோரை தவிர்க்க வேண்டிய தேவை தமிழரசுக்கு காணப்படுகின்றது.
கஜேந்திரகுமாரின் கூட்டத்தைக் காரணம் காண்பித்து சுமந்திரன் சுவிட்சர்லாந்தின் கூட்டத்தினை தவிர்க்கும் நகர்வை கனகச்சிதமாக முன்னெடுத்திருக்கலாம். எது எவ்வாறாக இருந்தாலும் இப்போதைக்கு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
இந்த இடத்தில் சுவிட்சர்லாந்திடமும் கேள்விகள் உள்ளன. முதலில் கட்சியின் தலைவர்கள் அல்லது செய லாளர்கள் அத்துடன் அவர்கள் சார்ந்த பிரதிநிதி என்ற அடிப்படையில் சந்திப்பைச் செய்திருக்கலாம். எவ்வாறு சிறிதரன், குருபரன் அழைக்கப்பட்டனர். அதற்கான வரை யறை என்ன என்பது தெரியாதுள்ளது.
அதுமட்டுமன்றி, மைத்திரி- ரணில் கூட்டாட்சி அரசாங்கத்தின் போது முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக்கான முயற்சியில் சுவிட்சர்லாந்து முக்கிய தூணாக விளங்கியது. 2016-2020 ஆண்டுகளுக்கான சுவிஸ் ஒத்துழைப்பு மூலோபாயத்தின் கீழ், அவர்கள் வெறும் நிதியுதவி வழங்கும் நாடாக அன்றி, கூட்டாட்சி தொடர்பான நுட்பங்களை வழங்கும் ஒரு நிபுணத்துவத் தரப்பாகவே செயற்பட்டனர்.
இதனொரு கட்டமாக, 2016 ஒக்டோபரில் இலங்கை பாராளுமன்றக் குழுவினர் சுவிட்சர்லாந்துக்கு கல்விச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்குள்ள பிராந்திய சுயா ட்சி முறையைப் பயின்றனர். மொழிரீதியான மற்றும் கலா சார ரீதியான பன்முகத்தன்மையை எவ்வாறு ஒரு ஒற்றைக் கட்டமைப்பிற்குள் பேணலாம் என்பதற்கு ‘சுவிஸ் மாதிரி’ ஒரு சிறந்த உதாரணமாக முன்வைக்கப்பட்டது.
அதேபோன்று 2017 இடைக்கால அறிக்கை தயாரிப்பில் சுவிட்சர்லாந்தின் தொழில்நுட்ப ஆலோசனை கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. எவ்வாறாயினும் 2016-2018 காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட இடைக்கால அறிக்கைக்காக சுமார் 158 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டபோதும் அது தற்போது வரையில் கிடப்பி லேயே உள்ளது.
அதுட்டுமன்றி, சுவிட்சர்லாந்து அரசாங்கம் வெறும் அரசியல் ஆலோசனைகளை மட்டும் வழங்கவில்லை; மனித பாதுகாப்பு ஆலோசகர் (Human Security Adviser) ஒருவரை கொழும்பில் நியமித்து, இடைக்கால நீதி மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளைக் கண்காணித்தது. ஆனால், தென்னிலங்கை அரசியல் மாற்றங்களினால் அந்த கோடிக்கணக்கான ரூபா செல விலான முயற்சிகள் இறுதியில் தோல்வியிலேயே முடிந்தன.
அந்தவகையில் பார்க்கின்றபோது சுவிட்சர் லாந்துக்கு தான் செலவழித்த நிதி, நேரம், உழைப்பு ஆகியவற்றுக்கான விளைவினை ஏதோவொரு வகையில் மீளப்பெறுவற்கான தேவையுள்ளது. ஆகவே தற்போதைய சூழலை சுவிட்சர்லாந்து பயன்படுத்துவதற்கு விளைந்திருக் கலாம்.
அதேநேரம், சுவிட்சர்லாந்தின் முயற்சியை கடந்த கால நோர்வேயின் சமாதான முயற்சிகளுடன் ஒப்பிடவே முடியாது. நோர்வேயின் தலையீடு என்பது இரு தேசிய இனங்களுக்கு அதாவது அரசாங்கத்துக்கும் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான அதிகாரப்பகிர்வுக்கான மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமாகவே இருந்தது.
ஆனால், சுவிட்சர்லாந்தின் முயற்சி என்பது பாதிக்கப்பட்ட தமிழ்த் தரப்பிற்குள்ளேயே ஒற்றுமையை ஏற்படுத்துவதை மையப்படுத்தியதாகவும், ஏதோவொரு வகையில் அரசுடன் இணக்கப்பாட்டை எட்ட வைப்பதையும் நோக்கமாகவே கொண்டிருக்கின்றது.
இதில் சுவிட்சர்லாந்து தமிழ்த் தேசிய அபிலாசை களை மலினப்படுத்துவதற்கு முனைகின்றதா என்றொரு விசனம் இருந்தாலும் தமிழினம் தங்களுக்குள்ளேயே பேசிக்கொள்ள முடியாத நிலையில், அதற்கும் வெளிநாடு மத்தியஸ்தம் வகிக்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கும் வெட்கக்கேடான நிலைமையானது தமிழ்த் தேசிய அரசிய லின் தார்மீகத் தோல்வியே.



