இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரண்ணாகொட, உடல்நலக் குறைபாடு காரணமாக இன்றைய தினம் (22) இலஞ்சம் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்னிலையாகவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவின் கடற்படை நியமனம் மற்றும் பயிற்சி விவகாரம் தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் வழங்கவே இவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
யோஷித ராஜபக்ஷவின் தகுதிகளில் திருத்தங்களை மேற்கொண்டு, எவ்வாறு இலங்கை கடற்படையில் நிறைவேற்று அதிகாரியாக இணைத்துக் கொள்ளப்பட்டார் என்பது குறித்தும், அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தி பிரித்தானிய றோயல் கடற்படைக் கல்லூரியில் அவர் எவ்வாறு பயிற்சி பெற்றார் என்பது குறித்தும் லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
முன்னதாக, கடந்த 16 ஆம் திகதியன்றும் இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு வசந்த கரண்ணாகொடவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், தனக்கு அதற்கான கடிதம் கிடைக்கவில்லை எனக் கூறி அவர் அன்றைய தினம் முன்னிலையாகியிருக்கவில்லை.
அதனைத் தொடர்ந்தே இன்றைய தினம் சமுகமளிக்குமாறு மீண்டும் அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த 17 ஆம் திகதி காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



