சீரற்ற வானிலை: 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் சாத்தியம் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று 100 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளிலும் 75 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த மழையுடனான வானிலையினால் நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.