சீனாவுடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்து

சீனாவுடன் 500 மில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் இன்று கையெழுத்திட்டுள்ளது.

சீன அபிவிருத்தி வங்கியுடன் செய்துகொள்ளப்பட்டுள்ள இந்தக் கடன் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் சீனாவுக்கான இலங்கைத் தூதுவர்  பாலித கோஹன கையெழுத்திட்டார்.

கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்பட்ட பின்னடைவுகளில் இருந்து விரைவான பொருளாதார மீட்சி பெற இந்த நிதி உதவும் என இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கோஹன தெரிவித்தார்.

இந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் இலங்கை மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ஊக்குவிக்கும் மற்றும் இலங்கை நாணய பெறுமதியை வலுப்படுத்தும் என பீஜிங்கில் உள்ள சீனாவுக்கான இலங்கைத் தூதரகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா இலங்கையில் விசுவாசமான நண்பராக உள்ளது. எங்கள் நட்பின் ஆழத்தை பிரதிபலிக்கும் விதமாக கடினமான சவால்களைச் சமாளிக்க இலங்கைக்கு சீனா தொடர்ந்து உதவிக் கரம் நீட்டி வருகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு 600,000 கோவிட் -19 தடுப்பூசிகளை சீனா இலங்கைக்கு அனுப்பியது என பாலித கோஹன தெரிவித்ததார்.

அத்துடன்- வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கல்வி, விளையாட்டு மற்றும் பிற துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்களையும் பாலித கோஹன வரவேற்றார்.

இதேவேளை, தற்போது இலங்கைக்கு வழங்கப்பட்ட 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனானது கடந்த ஆண்டு உறுதியளிக்கப்பட்ட 1 பில்லியன் டொலரின் மற்றொரு பகுதியாகும். முதல் கட்டமாக இதில் 500 மில்லியன் டொலா்கள் கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டது எனவும் சீனாவுக்காக இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.