சீனப் பயணம் குறித்து மக்களுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும் – அரசாங்கத்தை வலியுறுத்துகிறது ஐக்கிய மக்கள் சக்தி

ஜனாதிபதியின் சீனப் பயணத்தின்போது கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகள் மற்றும் எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, “ஜனாதிபதிக்கு சீனாவில் சிறப்பான வரவேற்பு கிடைக்கப்பெற்றுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது” என்றும், “இதற்கு முன்னரும் எமது நாட்டு ஜனாதிபதிகளுக்கு இவ்வாறு வரவேற்பளிக்கப்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளாா்.

“வரவேற்பென்பது முக்கிய விடயம் அல்ல” என்றும், “அதன்பின்னணியில் உள்ள பொருளாதார, அரசியல் மற்றும் சமுக நிகழ்ச்சி நிரல்கள்தான் முக்கியம். அவை தொடர்பில் அறிய வேண்டும்” என்றும் திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தியுள்ளாா்.

“15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன எனக் கூறப்படுகின்றது. இவை என்ன? இதனை எப்படி அறிவது? மேற்படி ஒப்பந்தங்கள் தொடர்பில் பாராளுமன்றம் மற்றும் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்” என்றும் திஸ்ஸ அத்தநாயக்க கேட்டுக்கொண்டுள்ளாா்.