சிவசேனை அமைப்பின் திடீா்ப் பிரவேசத்தால் வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கூட்டத்தில் குழப்பம்

9 3 சிவசேனை அமைப்பின் திடீா்ப் பிரவேசத்தால் வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கூட்டத்தில் குழப்பம்வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலய நிர்வாகத் தெரிவுக் கூட்டத்துக்குள் அழையா விருந்தாளியாக சிவசேனை அமைப்பினர் சென்றமையால் ஆலய பக்தர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறியதுடன் பழைய நிர்வாகத்தைத் தொடரவும் முடிவு எடுத்துள்ளனர்.

வவுனியா வடக்கு, ஒலுமடு, வெடுக்கு நாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் புதிய நிர்வாகத் தெரிவு மற்றும் மாவட்ட மட்ட தெரிவுகளுக்கான பொதுக்கூட்டம் இன்று காலை ஒலுமடு பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது. ஆலயப் பூசகர் மற்றும் ஆலய நிர்வாகத்தினர், ஆலயப் பக்தர்கள், வேலன் சுவாமிகள், வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தந்தோர் எனப் பலரும் கலந்துகொண்டு கூட்டத்தை ஆரம்பித்தனர்.

இதன்போது, ஆலய நிர்வாகத்தின் அழைப்பின்றி சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம், விபுலானந்த சுவாமிகள் உள்ளிட்ட ஒரு குழுவினர் அங்கு வருகை தந்திருந்தனர். குறித்த குழுவினர் குருந்தூர்மலை விகாராதிபதியை இரகசியமாகச் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்ததாகக் கூறி, சிவசேனை குழுவினரை வெறியேறி நிர்வாகத் தெரிவுக்கு ஒத்துழைக்குமாறு மக்கள் கோரினர்.

அத்துடன் சிவசேனை முன்னிலையில் நிர்வாகத் தெரிவு இடம்பெறமாட்டாது எனவும், வெடுக்குநாறிமலையில் பல பிரச்சினைகள் நடந்தும் சிவசேனை அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளவில்லை எனவும், ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை எனவும் மக்கள் தெரிவித்ததுடன், அவர்களை வெளியேறுமாறும் கோரினர்.

எனினும், சிவசேனை அமைப்பினர் வெளியேறாமையால் ஆத்திரமடைந்த ஆலய நிர்வாகத்தினர் மற்றும் ஆலயப் பக்தர்கள் மண்டபத்தை விட்டு வெளியேறியதுடன், ஒரு வருடத்துக்குத் தற்போதைய நிர்வாக சபையே தொடர்ந்து இயங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியதுடன், மக்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.