சில உள்ளூராட்சிமன்றங்களில் தேர்தலுக்கு நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நாளை (03) வரை நீடிப்பு

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதியை சமர்ப்பித்துள்ள வேட்பு மனுக்களை மீண்டும் ஏற்றுக் கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிறப்புச் சான்றிதழ்களின் மூலப் பிரதிகளுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேட்பு மனுக்களை மீண்டும் ஏற்றுக் கொள்வது தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மீண்டும் ஏற்றுக் கொள்வதற்கு இணக்கம் காணப்பட்ட வேட்பு மனுக்களுடன் தொடர்புடைய உள்ளூராட்சிமன்றங்கள் தவிர்ந்த ஏனைய உள்ளூராட்சிமன்றங்களில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு நாளை (03) வரை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள சுமார் 30 மனுக்கள் இன்று (02) மீண்டும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் மொஹமட் லஃபார் தாஹீர் மற்றும் கே.பி.பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் அடங்கிய ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எனினும் ஏனைய காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களை மீண்டும் ஏற்றுக் கொள்வது தொடர்பில் பிரதிவாதிகளின் ஆலோசனையை பெற்று நாளைய தினம் சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு நீதியரசர்கள் ஆயம், சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

அதேநேரம் ‘வேட்புமனுக்களை நிராகரிப்பதற்கு தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் மேற்கொண்ட தீர்மானம் சட்டத்துக்கு புறம்பானது’ என்று மனுதாரர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் மன்றுரைத்தனர்.