சிறிதரனுக்கு எதிராக குற்றப் புலனாய்வு துறையில் முறைப்பாடு!

தமக்கு எதிராக நேற்று (24) குற்றப்புலனாய்வுத்துறையின் நிதிக்குற்றப்பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை தாம் வரவேற்பதாக, யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நடத்தப்படும் விசாரணைகளில் உண்மைகள் வெளிவரும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக தெரிவித்துள்ள, சிவில் செயற்பாட்டாளர் ஒருவர், நேற்று குற்றப்புலனாய்வுத்துறையில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.

அதில், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தமது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் பெயர்களின் சொத்துக்களை பராமரித்து வருவதாக முறைப்பாட்டாளர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் வெளிப்படுத்தப்படவேண்டும் என்று, அவர் கோரியிருந்தார்.

இந்தநிலையில், குறித்த முறைப்பாடு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் ஊடங்களுக்கு தமது தரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டுக்கள் தொடர்பான முறைப்பாட்டை வரவேற்பதாகவும், விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் வெளிப்படுத்தப்படும் என்று நம்புவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்ற நிலையில், தமக்கு எதிரான முறைப்பாடு குறித்து விசாரணைகள் நடத்தப்படும்போது அதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.