சிறந்த பெண் தொழில் முயற்சியாண்மையாளருக்கான விருதினை பெற்ற பெண்மணியின் வெற்றிக் கதை – பகுதி ஒன்று

“உயர்தரம் கற்றபின் வீட்டில் சும்மா இருந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு பேக் கம்பனியில் வேலைக்கு சென்றேன் அங்கு அவர்கள் தைப்பதை பார்த்து பழகிய நான் ஒரு மாதமும் 10 நாட்களுமே வேலை செய்ய கூடிய வாய்ப்பு கிட்டியது ஏனெனில் எனது கணவர் வேலைக்கு செல்வதை நிறுத்துமாறு கேட்டிருந்தார் அதனால் விலகினேன்” என திருகோணமலை முள்ளிப்பொத்தானை சேர்ந்த இயந்திரம் மூலமான பை உற்பத்தியாளரான எம்.ஆர்.பிஸ்ரியா எனும் சுயதொழில் முயற்சியாண்மையாளர் தெரிவித்தார்.

Trinco women 2 சிறந்த பெண் தொழில் முயற்சியாண்மையாளருக்கான விருதினை பெற்ற பெண்மணியின் வெற்றிக் கதை - பகுதி ஒன்றுகுறித்த பெண்மணி தையல் இயந்திரங்கள் மூலமாக பல பாடசாலை பைகள்,பெண்களுக்கான பைகள் என பல வகையான டிசைன்களில் உற்பத்தி செய்வதுடன் கடை ஒன்றை வைத்து கூலியாட்கள் வைத்து உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்.சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு (2023) மகளிர் விவகார அமைச்சின் மூலமாக நடாத்தப்பட்ட சிறந்த பெண் தொழில் முயற்சியாளருக்கான விருதினையும் திருகோணமலை மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

“ஆரம்பத்தில் 2500 ரூபாவை முதலாக கொண்டு ஆரம்பித்த எனது தொழில் தற்போது 10 இலட்சம் வரையாக அதிகரித்துள்ளது இதன் மூலமே மூலதனப் பொருட்களை கொள்வனவு செய்து தொழிலை நல்ல முறையில் கொண்டு செல்கிறேன் ஆரம்பத்தில் வேலையை விட்டு விலகுமாறு எனது அன்புக் கணவர் கூறினார் பின்னர் ஆறு மாதங்களாக  வீட்டில் சும்மா இருந்தேன் ஆனால் எனக்கு சும்மா இருக்க முடியாது என கணவரிடம் அடம்பிடித்தேன் பின்னர் தையல் மெசின் ஒன்றை வாங்கித் தந்தார் அதன் மூலமாக துணி வகைகளை கொண்டு முதலில் சிறிய சிறிய பைகளை தைத்துப் பழகினேன்” என சிறிய நடுத்தர தொழிலில் ஈடுபடும் குறித்த  பெண்மணி கூறினார்.

பிஸ்ரியாவின் சொந்த ஊர் கண்டி திருகோணமலை முள்ளிப்பொத்தானையில் திருமணம் செய்து கொண்டார் மூன்று ஆண் பிள்ளைகளுக்கு தாயான இந்த பெண்மணி வாழ்க்கையில் பல தடைகளை தாண்டி முன்னேறியுள்ளார் பல சவால்களுக்கும் முகங்கொடுத்துள்ளார். ஆரம்ப காலத்தில் தனது தொழிலை தொடங்கிய பின் சிறிய வருமானமீட்டல் ஊடாக ஜூகி தையல் இயந்திரத்தை கொள்வனவு செய்து படிப்படியாக முன்னேறி தனது உற்பத்திகளை பாரிய சந்தைப்படுத்தலுக்கு உட்படுத்தி தானே தன்னகத்தே வருமானத்தை அதிகரித்து கொண்டார்.தற்போது தனது பை உற்பத்தி கடையில் ஆறு பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

“சந்தைப்படுத்துவதில் பல சிரமங்களை முதலில் எதிர் கொண்ட நிலையில் தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் சிறு கைத்தொழில் உற்பத்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிய திருமதி சேகரி என்பவர் எனது வீட்டுக்கு வந்து என் உற்பத்திகளை பார்வையிட்டார் அதன் பின் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி தந்தார்”

இக்கட்டான சூழ் நிலையில் இத் தொழிலில் முன்னேற வேண்டும் என நினைத்த குறித்த பெண்மணி கணவனின் வெறுப்பு பேச்சான தொழில் செய்ய கூடாது போக வேண்டாம் என்ற உணர்வினை வைத்து தடைகளை உடைத்தெறிந்து ஒரு சிறந்த தையல் பயிற்சி வளவாளராகவும் தற்போது திறம்பட செயற்பட்டு வருகிறார்.

“கண்டியில் அவ்வப்போது குடும்பத்தில் இது வரைக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த போது நால்வர் மரணித்தார்கள் உடனடியாக மரண வீட்டுக்கு இங்கிருந்து சென்றேன் பல கவலைகள் நிறைந்த அந்த சோகமான நேரத்திலும் மனமுடைந்து போகவில்லை.

தொழிலை விட வில்லை எனது தொழில் முயற்சிகளை கண்டு கொண்ட USAID நிறுவனத்தினர் ஐந்து இயந்திரங்களை வழங்கியுள்ளார்கள் இதன் மூலம் ஆறு இளம் பெண் யுவதிகளுக்கு தொழில் வழங்கியுள்ளேன்”

Trinco women 1 சிறந்த பெண் தொழில் முயற்சியாண்மையாளருக்கான விருதினை பெற்ற பெண்மணியின் வெற்றிக் கதை - பகுதி ஒன்றுதனது திறமை விடா முயற்சி மூலமாக ஆரம்பத்தில் சந்தை வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக தொழிலை விட்டு விடாமல் தன்னம்பிக்கை மூலமாக முன்னேற வேண்டும் என நினைத்து அந்த நாள் ஞாபகத்தோடு தற்போது பல பயிற்சி நிலையங்களில் வளவாளராக தனது திறமையை வெளிப்படுத்தி பல ரூபாக்களை மாத வருமானங்களாக பிஸ்ரியா பெற்று வருகிறாள்.

தனது வீடானது சிறிய வீடாக இருந்தது மழை காலங்களில் அதிக காற்று வீசிகின்ற போது ஒரு முறை மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்ததால் ஒரு பகுதி நொறுங்கியது சில தையல் உபகரணங்களும் சேதமாக்கப்பட்டன இதனால் ஒரு தொகை பணம் தேவைப்பட்டது குறித்த பணம் கிடைக்காததால் வங்கியில் கடனுக்காக விண்ணப்பம் செய்யப்பட்ட போது வங்கியால் பல நிபந்தனைகளை முன்வைத்து விண்ணப்பம் கிடைக்கப் பெற்று நிராகரிக்கப்பட்டதாகவும் இங்கு பகிர்ந்து கொண்டார்.” அரச வங்கிகளில் கடன்களை பெறுவது மிகவும் கடினம்” எனவும் கூறினார்.

தனது சுயதொழில் மூலமாக வருமானத்தை ஈட்டிக் கொண்ட படியாக ஒரு இளமானிப் பட்டத்தையும் நிறைவு செய்து கொண்டார் அதன் பின் தையல் பயிற்சியில் தேசிய தொழிற் தகைமை மட்டம் iv உம் பூர்த்தி செய்த நிலையில் தொழில்வாண்மை தகைமையையும் தன்னகத்தே வைத்துக் கொண்ட இந்த பெண்மணி திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அரச அரச சார்பற்ற தையல் பயிற்சி நிலையங்களுக்கு ஒரு வளவாளராகவும் தன்னை தயார்படுத்தி கொண்டு மேலதிகமான வருமானம் ஈட்டல் என்றவகையில் மாத வருமானமாக 50 ஆயிரம் ரூபாவுக்கும் மேலாக இலாபத்தை தேடிக் கொள்கிறார்.

சுறு சுறுப்பான நடை பாவனை உரத்த குரலில் எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகக்  கூடிய திறமைகளை கொண்டும் காணப்படுகிறாள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் மாத வருமானமாக 20 ஆயிரம் ரூபா பெற்றவள் தற்போது அது பல மடங்காக அதிகரித்துள்ளது.

“அரச பேருந்திகளில் தான் ஏனைய இடங்களுக்கு வளவாளராக செல்வேன் அதிக வெப்ப நிலை காரணமாக தலைவலி ஏற்படும் இதனால் உடல் சோர்வு அவ்வப்போது ஏற்பட்டாலும் அதனை பொறுட்படுத்தாது சுயமாக உழைக்க வேண்டும்” என கூறினார். மூன்று பாடசாலை செல்லும்  ஆண் பிள்ளைகளை படித்து எதிர்காலத்தில் பல கனவுகளுடன் வாழ வேண்டும் என யோசிக்கின்ற இந்த பெண் தனது இரண்டாவது மகனை புத்தளத்தில் உள்ள மேர்சி எனது பாடசாலையில் கற்பதற்காகன வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்தும் உள்ளார்.

Trinco women 3 சிறந்த பெண் தொழில் முயற்சியாண்மையாளருக்கான விருதினை பெற்ற பெண்மணியின் வெற்றிக் கதை - பகுதி ஒன்றுதற்போதைய தொழில் செய்யும் உற்பத்தி பகுதியானது சிறிய இடமாக உள்ளதால் தொழிலை மேற்கொள்வது கடினமாக உள்ளது இதனை விருத்தி செய்ய வேண்டும் என பலத்த எதிர்பார்ப்பு அவளது மனதுக்குள் குடி கொண்டிருக்கிறது ” 15 இலட்சம் வங்கி கடனுக்காக அப்போது முதல் விண்ணப்பம் செய்து அது கிடைக்கவில்லை அதனை விட்டு விட்டேன்” என கூறினாள்.

சமூகத்தில் தான் ஒரு பெண்ணாக நின்று முன்னேற வேண்டும் ஆண்கள் மாத்திரம் தான் சுயதொழில் செய்ய வேண்டும் அதனை சந்தைப்படுத்த வேண்டும் என்ற நிலை இன்றி பெண்களும் சாதிக்கலாம் வறுமைக்கு இடமில்லாமல் தன்னை ஒரு முன்னூதாரணமாக நிறுத்தி தான் மூலமாக ஏனைய ஆறு குடும்பங்கள் இவளை நம்பி வாழ்கின்றன.

சந்தைப்படுத்தலை மேற்கொள்ள பல வழி வகைகளை பயன்படுத்தி உள்ளார். சமூக வலைத்தளம் ஊடாக இணைய வசதி சந்தை வாய்ப்பு மற்றும் தனது கடைக்கு நேரடியான சில்லறை மொத்த விற்பனை என பல சந்தைப்படுத்தல்களை விருத்தி செய்து புன்முறுவலுடன் சந்தோசமான குடும்ப வாழ்க்கையினை வாழ்ந்து வருகிறார். தனது கணவனின் தகப்பன் ஒரு முதியோர் அவரும் இவரது கண்காணிப்பில் வீட்டில் வசித்து வருகிறார் வயோதிபரை கவனித்தும் தொழிலை முன்னெடுத்துச் செல்லும் மனம் தளராத ஒரு சாதனை பெண்ணாக இந்த பெண் மாறி வருகிறாள் இதன் மூலம் நாட்டின் பொருளாதார துறைக்கும் பாரிய பங்களிப்பு செய்து வரும் ஒரு இரும்புப் பெண்ணாக திகழ்கிறாள்.

கொரேனா காலங்களில் விற்பனை துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது அதனை பொறுட்படுத்தாது எஞ்சியிருக்கும் பல மீற்றர் கொண்ட துணி வகைகளை கொண்டு பைகளை தைத்து சேமித்து வைத்தாள் கொரோனாவில் இருந்து நாடு மீண்டதன் பின்னர் சந்தை வாய்ப்பை அதிகரித்து அதில் இருந்து கிடைக்கப் பெற்ற இலாபத்தில் ஒரு தையல் இயந்திரத்தையும் வாங்கினார்.

ஹஸ்பர் ஏ ஹலீம்

தொடரும்…..