தேச எல்லைகளைக் கடந்து பயணிக்கின்ற சவால்களுக்கு முகங்கொடுக்க உலகளாவிய பிரஜைகள் என்றவகையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’ என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் உலக அரச உச்சி மாநாட்டில் இன்று (12) உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். ‘உலக காலநிலை பிரச்சினைகள் வறியவர், செல்வந்தர் என்று பாராமல் அனைவரினதும் கதவுகளை தட்டிக்கொண்டிருப்பதாகவும், தேச எல்லைகளைக் கடந்து பயணிக்கின்ற சவால்களுக்கு முகங்கொடுக்க உலகளாவிய பிரஜைகள் என்றவகையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’ என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
‘பொருளாதார அபிவிருத்தி, புத்தாக்கம் மற்றும் அரச நிர்வாக மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையின் நோக்கு’ என்ற தலைப்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரையாற்றினார்.
நிலையான அபிவிருத்தி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான இலங்கையின் அர்ப்பணிப்பு தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதியினால் வலியுறுத்தப்பட்டது.
‘சமூக நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியானது தரமிக்க தேசமொன்றைப் போன்றே வளமிக்க உலகமொன்றுக்கு மிகவும் முக்கியமானதாக அமைகின்றது’ என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
உடன்படிக்கைகளையும் சட்டங்களையும் முறைசார்ந்தவகையில் அமுலாக்குவதும், குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கும் உறுதி நிலையற்ற சமுதாயங்களுக்கும் முறைப்படி ஒத்துழைப்பினை வழங்குவதும் , உத்தியோகத்தர்களின் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்காக சுதந்திர ஊடகங்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தியதாக அவரது ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.