யாழ்.செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அத்துடன் 7ஆம் காலணி இராணுவப்படை தலைமையகத்தில் கொலை செய்யப்பட்டு செம்மணி சோதனைச்சாவடிக்குக் கொண்டுவரப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமி மற்றும் அவரது குடும்பத்தாரின் சடலங்களை கெப்டன் லலித் ஹேவகேயின் ஆணைக்கு அமைய புதைத்ததைத் தவிர வேறேந்தக் குற்றத்தையும் தனது கணவர் புரியவில்லை என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று கடந்தகால அரசாங்கங்கள் இராணுவ உயரதிகாரிகளைப் பாதுகாத்துக்கொண்டு, கீழ்மட்ட உத்தியோகத்தர்களை தண்டிப்பதன் ஊடாக, குற்றமிழைத்த இராணுவத்தினரை தண்டித்திருப்பதாக சர்வதேச சமூகத்துக்குக் கூறிவந்ததாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மேல் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இந்த விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவியான எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் இந்த வாரம் அவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் கடிதமொன்றை அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை மற்றும் அவரது குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்டமைக்கும் தமது கணவருக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
‘மாறாக 7ஆவது காலணிப்படை தலைமையகத்தின் புலனாய்வு அதிகாரியான கெப்டன் லலித் ஹேவகே தலைமையிலான புலனாய்வு அதிகாரிகளால், செம்மணி சோதனைச்சாவடியில் கைதுசெய்யப்படும் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 7ஆவது படையணி தலைமையகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு மரணித்தவர்களின் உடல்கள் மீண்டும் செம்மணி சோதனைச்சாவடி அமைந்துள்ள இடத்துக்குக் கொண்டுவரப்படும்’ ‘அங்கு பணியாற்றிய எனது கணவர் உள்ளடங்கலாக இவ்வழக்கில் தண்டனை பெற்ற ஐவரிடமும் அந்த உடல்களைப் புதைக்குமாறு கெப்டன் லலித் ஹேவகேயினால் ஆணையிடப்படும்’.
‘அதன்பிரகாரம் எனது கணவர் உள்ளடங்கலாக ஐவரால் செம்மணி சோதனைச்சாவடிக்கு அண்மையில் உள்ள பகுதியில் அந்த உடல்கள் புதைக்கப்படும்’ என்று சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
‘வீதியில் செல்லும் வாகனங்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதே 1996ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் செம்மணி சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டுவந்த எனது கணவர் சோமரத்ன ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஏனைய ஐவரினதும் வேலையாக இருந்தது’. ‘செம்மணி சோதனைச்சாவடியானது அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்துக்குள் உள்நுழையும் பிரதான சோதனைச்சாவடியாக இருந்தது’.
‘அந்த சோதனைச்சாவடியில் பணியாற்றிய எனது கணவர் உள்ளடங்கலாக ஏனைய ஐந்து இராணுவத்தினருக்கு மேலதிகமாக கெப்டன் லலித் ஹேவகேயின் ஆலோசனைக்கு அமைவாக காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை மொழிபெயர்ப்பாளர்கள் என்ற ரீதியில் நாளாந்தம் இந்த சோதனைச்சாவடிக்கு வருகைதரும் லெப்டினன் துட்டுகல, லெப்டினன் உதயகுமார, மொழிபெயர்ப்பாளரான பொலிஸ் பரிசோதகர் சமரசிங்க, பொலிஸ் பரிசோதகர் நஸார் ஆகியோரால் அந்த வீதியில் செல்லும் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்படுவர்’.
‘அவர்கள் மாலை 4 மணிக்கு பின்னர் ட்ரக் வாகனத்தில் ஏற்றப்பட்டு 7ஆவது காலணி இராணுவப்படை தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்படுவர்’. ‘அங்கு மரணிப்போர் இரவு வேளையில் மீண்டும் செம்மணி சோதனைச்சாவடிக்குக் கொண்டுவரப்படுவர்’.
‘அவர்களைப் புதைக்குமாறு எனது கணவர் உள்ளிட்ட தரப்பினருக்கு உத்தரவை வழங்கிவிட்டு, வந்தவர்கள் மீண்டும் திரும்பிச்செல்வார்கள் என்றே எனது கணவர் கூறியிருக்கிறார்’ என்றும் கிருஷாந்தி குமாரசுவாமி வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘செம்மணி சோதனைச்சாவடியில் இவ்வாறான நடவடிக்கைகள் சுமார் ஒருவருடகாலமாக இடம்பெற்றிருக்கின்றன’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.