சர்வதேச வர்த்தக போர் காரணமாக இலங்கையின் ஏற்றுமதி தொழில்துறை பாதிப்பு : வொல்கர் ரெக் எச்சரிக்கை

சர்வதேச வர்த்தக போர் காரணமாக இலங்கையின் ஏற்றுமதி தொழில்துறை மிகப் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் வொல்கர் ரெக் எச்சரித்துள்ளார்.

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 59வது அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சமீபத்தைய வரிகள் குறித்தே அவர் தமது உரையில் முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அமெரிக்க வர்த்தகப் போரின் அதிர்ச்சிகள் மூன்றாம் உலக நாடுகளை சுனாமியின் வலுவோடு தாக்கும் என வொல்கர் ரெக் தெரிவித்துள்ளார். கரீபியன் நாடுகள், அபிவிருத்தி அடைந்துவரும் சிறிய தீவு நாடுகள் ஆகியவை மோசமான பாதிப்பை எதிர்கொள்ளும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

இலங்கை, பங்களாதேஷ், கம்போடியா, வியட்நாம் போன்ற ஏற்றுமதி தொழில்துறையை அடிப்படையாகக் கொண்ட நாடுகள் பெரும் பேரழிவு பாதிப்புகளை எதிர்கொள்ளும் எனவும் வொல்கர் ரெக் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர், வடக்குக்கு விஜயம் செய்ய வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி யோகராசா கலாறஞ்சினி இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
அத்துடன், செம்மணி சிந்துபாத்தி மனித புதைக்குழி விடயம் மூடி மறைக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அந்தப் பகுதியினை பார்வையிட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.