சர்வதேச பெண்கள் நாள்: நவீன பெண்ணியத்தின் ஓர் பார்வை : தமிழ்மொழி

இன்றைய வாழ்வியல் திருப்பத்தில் பெண்ணியம் சுதந்திரம் அடைந்திருக்கிறதா என்றால் அது ஒரு கேள்வியாகவே எழுகின்றது. தொழில் நுட்பம் வளர்ந்து உலகம் கைகளுக்குள் சுருங்கிய போதும் உலகெங்கும் வாழும் பெண்களின் பாதுகாப்பு பூரணப் படுத்தப்பட்டதா? அவர்களால் தனித்துவமாக வாழ முடிகிறதா? சுதந்திரமாக நடமாட முடிகிறதா? தாயாக, மகளாக, மனைவியாக, சகோதரியாக, தோழியாக, வழிகாட்டியாக, நலம் விரும் பியாக பல்வேறு உயிரோட்ட உணர்ச்சிகளின் கலவையாக பெண் இருந்த போதிலும் அவள் எத்தகைய சமூக பார்வையால் சுட்டெரிக்கப்படுகிறாள் என்பது நாளுக்கு நாள் நிகழும் சம்பவங்கள் நமக்கு கண்ணூடாகவே காட்சியாக மாறுகிறது. அதுவும் ஈழத்தில் வாழும் பெண் களின் வாழ்வியல் பக்கம் என்பது இருவேறாக நாங்கள் நோக்க வேண்டிய கடப்பாடுள்ள சமூகமாக  இன்று தள்ளப்பட்டுள்ளோம்.
2009 காலப்பகுதிக்கு முன்   கடல், தரை வான் என உயிர் தியாகங்களால் பெண்கள் ஈழத்தை நிறைத்திருந்த காலம். நடுச்சாம பொழுதுகளும் பெண்களுக்கு துணை நின்ற காலம். மண்ணை நேசித்தவர்களால் பெண்கள் புனிதமாக மதிக்கப்பட்டு வீரமறத்தியராய் உலவிய காலம். பெண்ணை தொட்டவருக்கு மரணம் என்ற காலம். கற்பழிப்புகள், பாலியல் சீண்டல்கள், சாதிய கொடுமைகள், சீதனக் கொடுமைகள் மலையேறிப்போன பொற்காலம். ஆங்காங்கே அங்கொன்றாய் இங்கொன்றாய் குடியால் பெண்கள் நெருக்கடிகளைச் சந்தித்திருந்தாலும் 100க்கு 95 வீதம் முழுப் பாதுகாப்பும் சுதந்திரமும் உணர்ந்த காலம். ஆணும் பெண்ணும் சமமாக களமும், பின் தளமும் பணிகளை செய்த புனிதமான காலம். இச்சை கொண்டு பெண்களை ஏறெடுக்காத காலம். இன்று பெண்கள் விண்ணில் பறந்து சாதனை படைக்கும் அளவுக்கு முன்னேறி இருந்தாலும் பதவிகளிலும் சரி, உழைப்பிலும் சரி ஆண் பெண் இருபாலரும் சரிசமமாக உலகம் முழுதும் வாழ்ந்தாலும் நாளுக்கு நாள் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பெண்களின் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் கேள்விக்குறியாகிறது.
அடுத்தவர்களுக்காகவே அர்ப்பணிப்பு உணர் வோடு வாழ பிறந்த அவதாரம் பெண். இவ்வாறு சாதனை உயரத்தை எட்டி உள்ள மகளிர் சமுதாயத்திற்கு என்று ஒரு நாள் உலகெங்கும் ஒருங்கே கொண்டாடப்படுகிறது என்றால் அது தான் உலக மகளிர் தினம். ஆண்டு தோறும் மார்ச் மாதம் 8-ம் திகதி அன்று இந்த மகளிர் தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை விடப்படுகிறது.
ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக் கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிடலாம். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப் படுகிறது. பெண்களின் மகத்துவம் போற்றும் இந்த தினம் எவ்வாறு உருவானது என்பதையும் முதலில் நாம் அறிய வேண்டும். 18-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண் கள் மட்டுமே பணியாற்றினர். வீட்டுவேலைகளை செய் வதற்காக பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத் திருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது.
1857-ம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள், தொழிற் சாலைகள், நிறுவனங்களில் பெண்களுக்கு பணி வாய்ப்பு தரப்பட்டது. பெண்களால் தொழிற்சாலைகளி லும் வேலை செய்ய முடியும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது. ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதனால் பெண்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி குரல் எழுப்பினர். அப்போதைய அமெரிக்க அரசு இதற்கு செவி சாய்க்க வில்லை. இதனால் அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள் கிளர்ச்சியில் இறங்கினர். 1857-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ம் திகதி இதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தை அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் ஒடுக்கினர். அதன்பிறகு 1907-ம் ஆண்டு சம ஊதியம், சம உரிமை கேட்டு பெண்கள் போராட தொடங்கினர். 1910-ம் ஆண்டு டென்மார்க் நாட்டில், பெண்கள் உரிமை மாநாடு நடந்தது. இதில் உலகின் பல நாடுகளை சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்து கொண்டு, தங்களது ஒற்றுமையை உலகிற்கு அவர்கள் காட்டினர். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்டு தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் மாதம் 8-ம்திகதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேறவில்லை.
1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட  ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8-ம் திகதி  உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து 1921-ம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 8-ம் திகதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
சில நாடுகளில் பெண்களுக்கான சில உரிமைகள் நிறைவேற்றப்படுகிறது. ஆனால் 2009 பின் எமது தமிழ் கலாச்சார மரபியல் சில விதிமுறைகள் என்று ஒடுக்கு முறைகளை மீண்டும் கட்டவிழ்த்து விட்டுள்ளது.
சீதனம் இது பெரும் உளவியல் போராகவே பெண் கள் மத்தியில் காணப்படுகிறது. இதனால் மணவாழ்வு இன்றி தம் காலத்தை முடித்துக் கொள்ளும் பெண்களும் அதிகம் உண்டு. கணவனுக்கு பணிந்து பணிவிடை செய்ய வேண்டும் என்ற விதி இன்னும் கொடுமை. கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் வீட்டுப் பொறுப்பில் இருவருக்கும் பங்கீடு உண்டு. அனேகமாக வேலைக்கு செல்லும் பெண்கள் இரண்டு கடமைகளையும் சுமந்து வாழ்கிறார்கள்.
பாலியல் சுரண்டல்கள் என்பன குறைந்த பாடில்லை. எல்லாவற்றையும் விட வேலியே பயிரை மேய்ந்தால் வேற்று நாட்டவன் சும்மாவா விடுவான் நம்மை என்பது போல். காணாமல்  ஆக்கப்பட்ட பிள்ளைகளை தேடி அலைந்து உயிர்துறந்த பெண்களின் நிலை ஈழத்தில் பெரும் வலி நிறைந்தது. வீரத்தோடு களத்திடை எதிரியை எதிர்த்த போராளிகளுக்கு இன்று எம்மவரிடம் தப்பித்து வாழ முடியாத பாலியல் சுரண்டல்கள். பத்து நூறாய் பிரிந்து கிடக்கும் எம்மினம் தப்பி வந்த பெண்போராளிகளை விலைபொருளாக்கி வேடிக்கை பார்க்க துடிக்கும் கொடுரக் காட்சிகள் வார்த்தைகளால் சொல்ல முடியாத துயர்.
இங்கு அனேகமானவர்கள் சமூகத்தால் குடும் பத்தால் ஒதுக்கப்பட்டு வாழ்கின்ற நிலை கூட அவர்களின் இந்த நிலைக்கு காரணமாகி விடுகிறது. தப்பித்து கொள்கை மாறாது வாழும் பெண்கள் இதற்கு விதி விலக்காக வாழ்கிறார்கள். உறவுகள் யாருமற்று தலைவரே தாயாய் மாறி வளர்த்த செஞ்சோலை பிள்ளைகளின் குடும்ப வாழ்க்கை மிகவும் மோசமானதாகவே ஈழத்தில் காணப்படுகிறது. அவர்கள் இருப்புக் காகவும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் உறவுகளை தேடி தவிக்கும் நிலையும் மனதை கசக்கி பிழிகிறது.
போதைக்கு அடிமையாகாது ஆண்களை பாது காத்த இனம் இன்று பெண்பிள்ளைகளை போதை யில் இருந்து மீட்க போராடும் கொடிய நிலை இருக்கும் போது இதில் நாம் மகளீர் தினத்தில் என்ன செய்தியை  சொல்லப் போகின்றோம். பெண்களின் சுயமரியாதை, நடத்தையை முன் நிறுத்தி பெண்களை நடைப்பிணமாக மாற்றும் நிலையும் இன்னும் மாறவில்லை. பெண்ணியம் இங்கு கேள்வியாகி நிற்கிறது.
ஒவ்வொரு மகளீர் தினமும் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும். பெண்களை பாதுகாக்கும் புதிய சட்ட மூலங்களைக் கொண்டு வரவேண்டும்.உலகிலேயே மகளிருக்கு அதிக மரியாதை வழங்கும் சமுதாயம் தமிழ் சமுதாயம். பெண்களை கடவுளுக்கு மேலாக வைத்து வழிபடுவதும் தமிழ் சமுதாயமே. மனித நாகரிகம் வளர காரணமான மகளிரின் முன்னேற்றம் குறித்த அனைத்து இலக்குகளையும் எட்ட மகளிர் உரிமை வென்றெடுக்கப்பட இந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம். இந்த நன்னாளில் மகளிர் தின வாழ்த்துக்களை கூறும் நாம் முழுமையான சுதந்திரத்தை உணர வேண்டும்.