ரணில் விக்ரமசிங்கவும் மனுஷ நாணயக்காரவும் அறிமுகப்படுத்தவிருந்த தனி தொழிலாளர் சட்டமூலத்தை மீண்டும் கொண்டுவருவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னிலை சோஷலிசக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அந்த கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ இதனை தெரிவித்தார்.
8 மணிநேர வேலை மணித்தியாலத்தை ரத்து செய்வதற்காக ரணில் விக்ரமசிங்க கொண்டுவந்த சட்டமூலத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை இந்த அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
இதனை ஒரு அடிமைச் சட்டம் என தற்போதைய தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க முன்னதாக தெரிவித்த காணொளிகள் சமூக ஊடகங்களில் தற்போதும் பகிரப்படுகின்றன.
குறைந்தது 7 பேரை கொண்டு தொழிற்சங்கமொன்றை ஆரம்பிக்கமுடியும். எனினும், இந்த வரையறையை குறித்த சட்டமூலம் ஊடாக மனுஷ நாணயக்கார 100 பேர் என்றவாறு அதிகரிக்க முயன்றார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான மாற்றம் ஏற்படுமாயின், ஒருபோதும் தொழிற்சங்கம் ஒன்றை ஆரம்பிக்க முடியாது.
தற்போது, ஊழியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்படுமிடத்துக்கு அதற்கு எதிராக உடனடியாக தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு தொழிற்சங்கங்களுக்கு இயலுமை உண்டு. எனினும், குறித்த சட்டமூலத்தில், பணிப்புறக்கணிப்பு ஒன்றை மேற்கொள்வதாயின் 30 நாட்களுக்கு முன்னதாக அறிவிக்க வேண்டும் என்ற விதிகள் உள்ளன என்றும் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.
இதனூடாக தொழிலாளர்களின் உரிமைகள் வெளிப்படையாக மீறப்படுவதுடன். இது முற்றுமுழுதாக தொழிலாளர்களுக்கு எதிரான ஒரு சட்டமாகும். இதனை அரசாங்கம் கொண்டு வரமுயற்சிக்குமாயின், ஒவ்வொரு நிறுவனமாக சென்று இது குறித்து பிரசாரம் செய்வதற்கும் தங்களது தரப்பு தயாராக உள்ளதாக முன்னிலை சோஷலிசக் கட்சி பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.