சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம் பறிபோகுமா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, அவர் வசித்து வந்த எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து அவர் வெளியேறவேண்டிய நிலை வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் 2015 தேர்தலில் இரா. சம்பந்தன் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, அவருக்கு வழங்கிய B- 12, மாகம்சேகர மாவத்தை, கொழும்பு – 7இல் உள்ள ஒன்றரை ஏக்கர் காணியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை, அவர் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் வரை பயன்படுத்த முடியுமன  கடந்த அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இதற்கான அனுமதிப் பத்திரத்தை முன்னாள் காணி மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கயந்த கருணாதிலக 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி சமர்ப்பித்திருந்தார்.

அவரின் இல்லத்தில் ஐந்து பேர் பணிக்கமர்த்தப்பட்டிருந்தனர். இவர்களுக்கான கொடுப்பனவுகளை காணி மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சு வழங்கி வருகின்றது.

இவற்றுடன் அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய KX-2330 மற்றும் KO-6339 ஆகிய இலக்கங்களைக் கொண்ட வாகனங்களும் இவற்றிற்கு 600 லீற்றர் எரிபொருளையும் மேற்படி அமைச்சே வழங்கி வருகின்றது.

இந்த வாசஸ்தலம் அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் வழங்கப்பட்டமையால், அதை அமைச்சரவைத் தீர்மானத்தின் மூலமே மாற்ற முடிம் என்று பொது நிர்வாக அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன் கூறியுள்ளதுடன், இதற்குரிய நடவடிக்கையை எடுக்கவிருப்பதாகவும் அறிவித்துள்ளார்.