சமூக வலைத்தளங்களில் பிரசாரத்துக்காக 6 கோடியே 68 இலட்சம் ரூபா இவ்வாரத்தில் மட்டும் செலவு

சமூக வலைத்தளங்களில் பிரசாரத்திற்காக இந்த வாரத்தில் மட்டும் 6 கோடியே 68 இலட்சம் ரூபாவை அரசியல்வாதிகள் செலவிட்டுள்ளனர். இதேவேளை சமூகவலைத்தளங்களில் தேர்தல் விளம்பரங்கள் – பிரசாரங்களை அகற்ற – தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று அதன் மூத்த அதிகாரியான சுரங்க ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரங்கள் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவுக்கு வந்தன. இந்நிலையிலேயே நேற்று அவர் இதனைத் தெரிவித்தார். இது விடயத்தில் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவற்கான சட்டம் இலங்கையில் இல்லை. எனினும் நாம் அவற்றை நீக்க முடியும்.

சமூக ஊடக பிரசாரத்திற்காக இந்த வாரத்தில் மட்டும் பேஸ்புக் தளத்திற்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் டொலர்களை – 2 கோடியே 85 இலட்சம் ரூபாவை அரசியல்வாதிகள் செலவிட்டுள்ளனர்.

பேஸ்புக் தவிர மற்றைய தளங்களுக்குமாக 3 இலட்சத்து 59 ஆயிரத்து 795 டொலர்களை – 6 கோடியே 68 இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளார்கள். முன்னைய வாரங்களுடன் ஒப்பிடுகையில் இந்தத் தொகை 53 சதவீதம் அதிகமாகும்.