சமூக செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் அவர்களின் “அம்பாறைத் தமிழர் வரலாற்றுச் சுவடுகள்” எனும் வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்வு தினம் சைவா அமைப்பின் ஒருங்கிணைப்பில் கல்முனை கிறிஸ்த இல்ல மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவருமான சிவஞானம் சிறீதரன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன், வைத்திய கலாநிதி இளையதம்பி சிறிநாத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் முதல்வர் தி.சரவணபவன், பிரதேச சபைத் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள், சைவா அமைப்பு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் தமிழ்நாடு வரலாற்று ஆய்வாளர் திரு.வேல்கடம்பன் அவர்களால் நூல் வெளியீடு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர் கு.கிலசனினால் நூலாசிரியர் பற்றியும் நூலைப் பற்றியும் உரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நூலாசிரியரினால் அதிதிகளுக்கு நூல் வழங்கி வைக்கப்பட்டதுடன், அதிதிகளில் விசேட உரைகளும் இடம்பெற்றன. தொடர்ந்து நூலாசிரியர் மதிப்பளிக்கப்பட்டதுடன், அதிதிகளுக்கான மதிப்பளித்தல் நிகழ்வும் இடம்பெற்றிருந்தன.
நூலாசிரியரின் 07 வருடங்கள் அயராத ஆய்வின் வெளிப்பாடாக இந்நூல் ஆக்கப்பட்டதுடன், அம்பாறை மாவட்டத் தமிழர்கள் எதிர்நோக்கி வந்த சவால்கள், பிரச்சனைகள், படுகொலைகள் உட்பட பல்வேறு அம்சங்கள் இந்நூலில் ஆய்வின் அடிப்படையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நூலாசிரியரினால் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் அணுசரணையினை CTR வானொலி,ILC மற்றும் இலக்கு ஊடகங்களின் இணை அணுசரணையுடன் சிறப்பாக இடம்பெற்றது.





