சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த பெறுமதிமிக்க ஒத்துழைப்பை வழங்குமாறு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தங்களின் கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றை அவர்கள் நேற்று (03) இந்திய துணைத் தூரகத்தில் கையளித்தனர். இலங்கையின் நீண்ட கால தேசிய பிரச்சினையை நிரந்தரமாக தீர்ப்பதற்கு இந்திய அரசின் பெறுமதிமிக்க ஒத்துழைப்பை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ள அவர்கள் தெரிவித்துள்ளனர்.

‘ஒரு நட்பான அயல் நாடு எனும் வகையில் இலங்கையின் நெருக்கடி காலங்களில் இந்தியா எப்போதும் உதவிக்கு வருகிறது’.’இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட பதின்மூன்றாவது திருத்தச் சட்டமானது குறிப்பீட்ட சில உரிமைகளை இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்களுக்கும் ஒட்டுமொத்த இலங்கைக்கும் உறுதிப்படுத்தியுள்ளது’.

‘குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு மாகாண ஆட்சி வழங்கப்பட்டது’.
‘எனினும், 13வது திருத்தச் சட்டமானது வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த மக்களுக்கு இறையாண்மை உரிமைகளுடன் கூடிய நிலையான அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தவில்லை’ என்று வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

‘தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தாததுடன் இராணுவ மயமாக்கலையும், சிங்கள காலணித்துவத்தையும் விரிவாக்கினர்’ என்று அந்த குழுவினர் கூறியுள்ளனர்.

எனவே, வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ் பேசும் மக்கள் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வையே நிரந்தர தீர்வாக கருதுகின்றனர்’ ‘அந்த வகையில் இலங்கையில் மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த ஒத்துழைப்பை வழங்குமாறு’ கோரிக்கை விடுத்துள்ளதாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.