சட்டவிரோத மீன்பிடி: முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம்

முல்லைத்தீவில் சட்டவிரோத  மீன்பிடித் தொழிலை கட்டுப்படுத்த கோரி முல்லைத்தீவு மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக திங்கட்கிழமை (21) போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

”அரசே சட்டவிரோதமான மீன்பிடித் தொழிலை கட்டுப் படுத்தி நீரியல் வளங்களைப் பாதுகாப்பவர்களை அச்சுறுத்தும் சமூக விரோதிகளை கட்டுப்படுத்து” என்ற தொனிப்பொருளின் கீழ்  இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் அதனை கட்டுப்படுத்துமாறு  கோரி மீனவர்கள் தொடர்ச்சியாக கோரிவந்த நிலையில் அண்மைக் காலமாக கடலிலும் நந்திக் கடல் களப்பு உள்ளிட்ட இழப்பு பகுதிகளிலும் சட்டவிரோத தொழில்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகின்ற நடவடிக்கையில் ஈடுபட்ட  மீனவர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்று அண்மையில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மீன்பிடி தொழிலை கட்டுப்படுத்துவதற்காக பாடுபடுகின்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்துமாறு கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.