சஜித் அணியுடன் இணையத் தயாராகின்றது ஐ.தே.க? தலைமைப் பதவி கருவிடம் செல்வதால் திருப்பம்

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியை அமைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி கவனம் செலுத்தியுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப் பதவியை கரு ஜயசூரியவிடம் ஒப்படைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க பச்சைக்கொடி காட்டியதையடுத்தே கரு ஜயசூரியவால் நேற்று விசேட அறிக்கையொன்று விடுக்கப்பட்டது.

கருவை தலைவராக்கும் திட்டத்துக்கு ஐ.தே.கவுக்கு சார்பான சிவில் அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே, விரைவில் ஐ.தே. கவின் தலைமைப் பதவியை கரு ஜயசூரிய பொறுப்பேற்பார் என நம்பப்படுகின்றது.

கரு ஜயசூரிய ஐ.தே.க. தலைவரான பின்னர் சஜித் அணியுடன் கூட்டணி அமைக்கப்படவுள்ளது. கூட்டணியின் தலைவராக சஜித்தும், ஐ.தே. கவின் தலைவராக கருவும் செயற்படவுள்ளனர். இரு அணிகளையும் இணைப்பதற்கான பேச்சு ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. இதன்படி இரு அணிகளும் தோழமைக்கட்சிகளும் இணைந்து பலமான அணியாக மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ளன.