சகல வதை முகாம்கள் தொடர்பாகவும் விசாரணைகள் இடம்பெறும்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு

‘பட்டலந்த வதை முகாம் மட்டுமல்ல பல வதைமுகாம்கள் இருந்தன. அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறும்’ என்று அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வவுனியாயில் இன்று (29) தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்களை சந்தித்து கலந்துரையாடிய பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
‘அரசாங்கம் ஒவ்வொரு செயற்பாடுகளையும் கட்டம் கட்டமாக செய்து வருகின்றது’. ‘அரசியல் கைதிகளை விடுவிக்க முடியும். ஆனால் அதனை உடனடியாக செய்ய முடியாது’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘நாம் ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள் தான் ஆகியுள்ளது. ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இருந்தாலும் அதனை படிப்படியாக அதற்கான செயன்முறைகள் ஊடாகத் தான் செய்ய முடியும்’.  ‘சில காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளது. ஆகவே சில நடைமுறைகளை பின்பற்றி தான் செய்ய வேண்டும். அந்த நடைமுறைகளின் பிரகாரம் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர்’ என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

‘பட்டலந்த போன்று பல வதை முகாம்கள் அந்தக் கலப்பகுதியில் இருந்துள்ளன. 1980 ஆம் ஆண்டு காலப் பகுதியல் பட்டலந்த வதை முகாம் போன்று பல வதை முகாம்கள் இருந்தன’. ‘தெற்கில் ஜேவிபி, யு.என்பி. பிரிந்து இருந்தது போன்று, வடக்கு – கிழக்கில் எல்.ரீ.ரீ.ஈ, புளொட், ஈபிடிபி, ஈபிஆர்எல்எப், ரெலோ என பிரிந்து செயற்பட்டு இருந்தார்கள்’என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

‘வதை முகாம்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் என எல்லோருமே பாதிக்கப்பட்டுள்ளார்கள்’. ‘எல்லாப் பிரச்சனைகளையும் உடனடியாக விசாரிக்க முடியாது. படிப்படியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இந்த நாட்டில் ஒரு நல்லிணக்கத்தை மீள கட்டியெழுப்ப வேண்டும்’ என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.