சகல பங்காளிக் கட்சிகளுடனும் சஜித் புரிந்துணர்வு – வெள்ளிக்கிழமை கூட்டணி அங்குரார்ப்பணம்

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அனைத்துப் பங்காளி கட்சிகளுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது. எனவே, எதிர்வரும் வெள்ளிக்கிழமை புதிய அரசியல் கூட்டணி அறிவிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் தலைவர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், ரவூப் ஹக்கீம் தலைமையிலான சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியனவும் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தலைமையிலான அணியினர், பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியுடன் ஏற்கனவே ஒப்பந்தம் கைச்சாத்தாகியிருந்தது. ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற பெயரில் இந்தக் கூட்டணி ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ளது. அத்துடன், தற்போதைய அரசாங்கத்தில் பதவி வகிக்கும் அமைச்சர்கள் குழு ஒவ்வொன்றும் எமது கூட்டணியில் இணைவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளது. அது தொடர்பிலான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனை விடவும் சிவில் அமைப்புகளும் தொழில்சங்கங்களும் குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்தாகும் நாளில் கைகோக்கவுள்ளன. இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையானது ஜே. ஆர். ஜெயவர்த்தன நிலையத்திலும் அதன் பின்னர் கூட்டணி அறிமுக நிகழ்வானது எதிர்க்கட்சித் தலைவர் பணிமனையிலும் நடைபெறவுள்ளது.

எவ்வாறாயினும், அரசியல் இலாபங்களுக்காக செயல்படுபவர்களையும் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களையும் கட்சியில் இணைத்துக்கொள்ள நாம் தயாரில்லை. எமது கொள்கைகளுடன் இணக்கம் வெளியிட்டு கட்சியில் இணைய விரும்புபவர்களையே இணைத்துக் கொள்ளவுள்ளோம். இதேநேரம், எதிர்வரும் மே தினத்தில் நகர சபை மண்டபத்தில் கூட்டத்துக்கான ஏற்பாட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது இலங்கை வரலாற்றில் அதிகளவு மக்கள் பங்கேற்ற கூட்டமாக பதிவாகும். இந்த மே தினத்தன்றும் எமது கூட்டில் பலர் இணைந்து கொள்ளவுள்ளனர்” என்றும் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.