கோத்தபாயாவுக்கு எதிராக மேலும் பல வழக்குகள் – அமெரிக்காவின் அடுத்த நகர்வு

சிறீலங்காவின் எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ரஜபக்சா போட்டியிடவுள்ள நிலையில் அவரை பணிய வைப்பதற்கான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகின்றது.

அவருக்கு எதிராக இரண்டு வழக்குகள் முன்னர் தொடுக்கப்பட்டிருந்தது. தற்போது போர்க் காலத்தில் அவரினால் வழிநடத்தப்பட்ட படையினர் மேற்கொண்ட துன்புறுத்தல்கள் தொடர்பில் மேலும் 10 பேர் அமெரிக்காவில் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.

சிறீலங்கா படையினர் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்களை அரசியல் கைதிகள் மீது மேற்கொண்டதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். நெருப்புக்குள் வைக்கப்பட்ட இரும்புக் கம்பிகள், மின்சார வயர்கள் போன்றவற்றால் தாம் தாக்கப்பட்டதாக இந்த வழக்குகளை பதிவு செய்துள்ள ஆண்களும் பெண்களும் தெரிவித்துள்ளனர்.

இது ஒரு எழுந்தமானமான நிகழ்வு அல்ல, திட்டமிட்ட நடவடிக்கை என இந்த வழக்கை பதிவு செய்த சட்டவாளர் அசோசியட் பிரஸ் செய்தி நிறுவத்திற்கு தெரிவித்துள்ளார்.