கொரோனா வைரஸின் கீழ் கொதித்துக் கனத்துச் சூடேறும் கேள்வி-கோ.ரூபகாந்

கொரோனா வைரஸ் பரவல்  ஒரு நெருக்கடி நிலைமையே தவிர அவசரகால நிலைமை அல்ல என்பதே ஜனாதிபதி கோத்தாபாயாவின் நிலைப்பாடு, ஆனால் நெருக்கடி நிலைமையையும் கடந்து, ஓர் அவசரகால நிலைமையை நாடு எட்டியுள்ளது. நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள தொடர்ச்சியான ஊரடங்கு உத்தரவு இதனை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி உள்ளது.

ஆயுத முரண்பாட்டுக் காலத்தில் நாட்டு மக்கள் இதுவரையில் கண்டனுபவித்த ஊரடங்கு சட்ட நடவடிக்கையைவிட இப்போதைய ஊரடங்கு உத்தரவு வித்தியாசமானது.  கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் மக்கள் மத்தியில் தொற்றிப் பரவுவதைத் தடுக்கும் வகையில் மக்களுடைய நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இப்போதைய ஊரடங்கு சட்ட நடைமுறையில் காரணமின்றி வீதிகளில் உலாவுபவர்கள் மீது இராணுவம் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. எனினும் ஊரடங்கு வேளையில் தகுந்த காரணமின்றி வீதிகளில் நடமாடிய 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைப் படையினர் கைது செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் தொற்றிப் பரவும் வேகம் உலகளாவிய ரீதியில் ஒன்றரை மில்லியனைக் கடந்து முன்னேறிக் கொண்டிருக்கின்றது. உலகளாவிய உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்தாலும்கூட கொரோனாவின் கோர உயிர்ப்பலிப் பசி அடங்கமாட்டாது போலத் தெரிகின்றது.

எங்கேயும் பரவும், யார் மீதும் தொற்றிக் கொள்ளும் என்பதற்கு அடையாளமாகவே ஸ்பெயின் தேசத்து போபன் பார்மா அரச குடும்பப் பரம்பரையைச் சேர்ந்த இளவரசி மரியா தெரேஸா கொரோனா வைரஸ் காரணமாக மரணமடைந்துள்ளார். பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் கொரோனா வைரஸ் நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகி உடல் நிலை பாதிக்கப்பட்டதனால் அவசர சிகிச்சைக்கு ஆளாகி தேறி வருகின்றார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகள் அவசர நிலைமைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் சின்னஞ்சிறு தீவாகிய இலங்கையில் கொரோனா வைரஸ் நோய்த்தாக்கம் ஒரு நெருக்கடி நிலையாக மாத்திரமே கணிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நோய்த்தாக்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள சமூகமய தனிமைப்படுத்தலுக்காக நாட்டின் செயற்பாடுகள் அனைத்தும் முடக்கப்பட்டிருக்கின்றன. முழுமையான கதவடைப்பு செய்யப்பட்டிருக்கின்றது.513819 01 02 1584802072 கொரோனா வைரஸின் கீழ் கொதித்துக் கனத்துச் சூடேறும் கேள்வி-கோ.ரூபகாந்

இதனால்  தொழில்துறை நடவடிக்கைகள், அரச தனியார் அலுவலகச் செயற்பாடுகள், ஆட்சி நிர்வாகச் செயற்பாடுகள், பொதுப் போக்குவரத்து போன்ற அனைத்து அத்தியாவசிய தேவைகளும் முடங்கியிருக்கின்றன.

நாடு மோசமான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றது. பங்குச் சந்தைச் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்திருக்கின்றன. அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி மிக மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. யுத்த காலத்திலும், யுத்தத்திற்குப் பின்னரான தேசத்தின் புனரமைப்புக் காலத்திலும் ஏற்பட்டிருந்த செலவினங்களுக்காகப் பெற்றிருந்த கடன்களை உரிய தவணையில் செலுத்த முடியாத கஸ்டமான நிலைமைக்கு நாடு ஆளாகியுள்ளது.

இதனால்தான்  அந்நியச் செலவாணி நிலைமையை சீராக்குவதற்கு புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்களிடம் கையேந்தி தாயகத்திற்குப் பணம் அனுப்பி வைக்குமாறு அரசு கோரிக்கை விடுத்திருக்கின்றது.

அத்தியாவசிய தேவைகள் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளுக்கும் அனேகமாக அந்நிய தேசங்களை நம்பியிருக்கின்ற இலங்கை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கம் காரணமாக பிற தேசங்களிடம் இருந்தும் நட்பு நாடுகளிடமிருந்தம் உதவிகளைப் பெற முடியாத நிலைமைக்கு உள்ளாகி வருகின்றது.
கொரோனா வைரஸ் நோய் காரணமாக எழுந்துள்ள பேரிடரினால் உற்பத்திச் செயற்பாடுகளையோ அல்லது தொழிற்துறைச் செயற்பாடுகளையே உடனடியாகச் செயற்படுத்த முடியாத நிலைமையில் நாடு தத்தளித்துத் தடுமாறிக் கொண்டிருக்கின்றது.

தேசிய பொருளாதார நிலைமைகள் இவ்வாறிருக்க, நாட்டின் அரசியலும் ஸ்திரமற்றதொரு நிலைமையிலேயே தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. முக்கியமாக 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலையடுத்து உருவாக்கப்பட்ட நாடாளுமன்றம், அதன் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே அரசியலமைப்பு விதியொன்றிற்கு அமைவாக நாலரை ஆண்டுகளில் கலைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தருணத்தில்தான் சுனாமி பேரலையின் பேரனர்த்தத் தாக்குதலைப் போன்று கொரோனா வைரஸ் நோய்த்தாக்கம் என்ற கண்ணுக்குத் தெரியாத பேரிடர் நாட்டைத் தாக்கியுள்ளது. நாட்டு நிலைமைகள் இதனால் தலைகீழாகப் புரண்டு கிடக்கின்றன.2020 03 24 90492 1585041346. large கொரோனா வைரஸின் கீழ் கொதித்துக் கனத்துச் சூடேறும் கேள்வி-கோ.ரூபகாந்

நாட்டின் சகல செயற்பாடுகளும் முடக்கப்பட்ட நிலையில் அநேகமான மக்கள் அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்ற நிச்சயமற்ற நிலைமைக்கு முகம் கொடுத்திருக்கின்றார்கள். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வீடுகளில் முடங்கி இருக்கின்ற நிலைமை இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பதை அறியாதிருக்கின்றனர். அரசாங்கமும்கூட இந்த சமூக முடக்கலை அல்லது முழுக்கதவடைப்பை எப்போது நீக்க முடியும் என்பதைத் தீர்மானிக்க முடியாத கையறு நிலைமைக்கு ஆளாகி இருக்கின்றது.

இருநூறை நோக்கி கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நகர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் 42 ஆயிரம் பேர் கொரோனாவுடன் தொடர்புடையவர்களாகவும் இவர்களை இருவாரங்களுக்குள் அடையாளம் கண்டு உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்றும் அரச மருத்துவர் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்குள் இந்தப் பரிசோதனைகள் நடத்தி முடிக்கப்படாவிட்டால் நிலைமைகள் மோசமடையலாம். நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு பாதிக்கப்படலாம் என்றும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார். தற்போதைய நிலையில் ஏப்ரல் மாத முடிவுவரையில் அதிக எண்ணிக்கையானவர்கள் கொரோனா நோய்க்கு ஆளாக நேரிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் சுகாதாரப் பொறிமுறையின்படி ஒரு தடவையில் 2000 கொரோனா நோயாளிகளையே கையாள முடியும் என்று அரச மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திடீரென கொரோனா நோய்த்தொற்றின் வேகம் அதிகரித்து நோயாளர்களின் எண்ணிக்கை கூடுமானால் நிலைமைக்கு சுகாதாரத்துறையினர் முகம் கொடுப்பது மிகவும் கடினமான காரியமாகிவிடும் என்றும் மருத்துவர்கள் கருதுகின்றார்கள்.
இதனால் மிகவும் முக்கியமான இந்தக் காலப்பகுதியில் நாட்டு மக்கள் மிகமிக அவதானமாகச் செயற்பட வேண்டும்.

தனிமைப்பட்டிருத்தலிலும் சமூகமாகத் தனிமைப்பட்டிருத்தலிலும் கூடிய கவனமும் அக்கறையும் கொண்டு செயற்பட வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு அரசும் அரச அதிகாரிகளும் மருத்துவத் துறையினரும் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர்.

கொரோனா அச்சுறுத்தல் தணியும் வரையில் ஊரடங்கு உத்தரவும் மக்கள் நடமாட்டத்திற்கான தடையும் அகற்றப்படமாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன மறுபுறத்தில் தெரிவித்துள்ளார்.

இத்தகைய பின்னணியில்தான் நாட்டில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்ற கருத்தை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நிலைமைகள் எப்படி இருந்தாலும் பொதுத் தேர்தலை நடத்தியாக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருக்கின்றார். ஆனால் தேர்தலை எப்போது நடத்துவது என்பதைத் தீர்மானிக்க முடியாமல் தேர்தல் ஆணையகம் தடுமாறிக் கொண்டிருக்கின்றது.

இந்த சிக்கலான நிலைமையில் என்ன செய்வது என்பது குறித்து உச்ச நீதிமன்றத்திடம் கருத்தறிய முடியாது என்று கருதப்படுகின்னறது. ஏனெனில் முன்னைய ஆட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாலரை ஆண்டுகள் கழிவதற்கு முன்பே நாடாளும்னறத்தைக் கலைத்து அதன் மூலம் நாட்டைக் குழப்பி இருந்தார். அவருடைய நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளின்போது, நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் நாலரை ஆண்டுகளில் கலைப்பதற்கன ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களின் தன்மை குறித்து அக்கு வேறு ஆணிவேராக நீதிமன்றம் பறைசாற்றி இருந்தது.unnamed 3 கொரோனா வைரஸின் கீழ் கொதித்துக் கனத்துச் சூடேறும் கேள்வி-கோ.ரூபகாந்

அரசியலமைப்புச் சட்டவிதிகளுக்கு உட்பட்ட வகையிலேயே நீதிமன்றம் கருத்துரைக்க முடியும். அரசியல் நடவடிக்கைகளுக்கு எவ்வாறு அரசியலமைப்புச் சட்டங்கள் வழிகாட்டுகின்றனவோ அதேபோன்றுதான் நீதிமன்றத்திற்கு அரசியலமைப்புச் சட்டங்களும் ஏனைய துறை சார்ந்த சட்டங்களும் வழிகாட்டுகின்றன. அந்த வழிகாட்டலுக்கு அமைவாக அந்தச் சட்டவிதிகளைக்கு அமைவாகவே நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்க முடியும். குறித்து வினவப்படுகின்ற விடயங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் சட்ட ரீதியான பொருள்கோடலைத் தெரிவிக்க முடியும்.

இப்போதுள்ள நிலைமையில் பொதுத் தேர்தலை நடத்த முடியாவிட்டால் என்ன செய்வது என்பதே பிரதான கேள்வியாகும். பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த முடியாத ஒரு சூழலில் நாடு நெருக்கடி நிலையொன்றில் சிக்கியுள்ள நிலையில் இந்தக் கேள்வி கொரோனா நோய்த் தொற்றிய பின்னர் ஏற்படுகின்ற காய்ச்சல் – நிமோனியா காய்ச்சல் போன்று கொதித்துக் கனத்து சூடேறிக் கொண்டிருக்கின்றது.

இதனால் ஏற்கனவே நெருக்கடியான நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ள நாடு ஓர் அவசரகால நிலைமைக்குள் அணு அணுவாகவும் விரைவாகவும் மூழ்கிக் கொண்டிருப்பதையே உணரவும் காணவும் முடிகின்றது.