கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்திருப்பதாக  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும்  இச்சம்பவத்துடன் தொடர்புடைய சகல தரப்பினரையும் ஆணைக்குழுவுக்கு அழைத்து வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது.

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 15 வயதுடைய மாணவி, அவர் வசிக்கும் தொடர்மாடிக்குடியிருப்பின் 7 ஆவது மாடியிலிருந்து குதித்துத் உயிர்மாய்த்த சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியில் பதிவானது.

இச்சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக, ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துவருகிறது.

அவ்விசாரணைகள் தொடர்பில் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கொட்டாஞ்சேனை தொடர்மாடிக்குடியிருப்பிலிருந்து மாணவியொருவர் உயிர்மாய்த்த சம்பவம் தொடர்பில் எம்மால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அதன் முதற்கட்ட விசாரணை கடந்த 14 ஆம் திகதி மு.ப 10.30 மணிக்கு ஆணைக்குழுவில் இடம்பெற்றது.

கொழும்பிலுள்ள சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபர், வலயக் கல்விப்பணிப்பாளர், சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர், பம்பலப்பிட்டி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி, கொட்டாஞ்சேனை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் வகுப்பு ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் விசாரணைக்காக ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இருப்பினும் பாடசாலை அதிபர் மற்றும் கணிதபாட ஆசிரியர் ஆகியோர் காரணத்தை அறியத்தராமல், விசாரணைக்காக உரிய நேரத்துக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுவதற்குத் தவறியமையினால், ஆணைக்குழு சட்டத்தின் பிரகாரம் அவர்களிடம் காரணம் கோருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பம்பலப்பிட்டி மற்றும் கொட்டாஞ்சேனை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் இச்சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துத் தெளிவுபடுத்தினர். அதேபோன்று வலயக் கல்விப்பணிப்பாளரின் சார்பில் பிரதி வலயக் கல்விப்பணிப்பாளர் ஆணைக்குழுவில் முன்னிலையாகி, விடயங்களைத் தெளிவுபடுத்தினார்.

அதன்படி இச்சம்பவம் தொடர்பில் இதுவரை முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதி வலயக் கல்விப்பணிப்பாளருக்கும், தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் விபரம் மற்றும் முன்னேற்றம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பம்பலப்பிட்டி மற்றும் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது.

அத்தோடு தனியார் வகுப்பு ஒருங்கிணைப்பாளர் ஆணைக்குழுவில் முன்னிலையாகி, குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளித்ததுடன், சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபரை மீண்டும் 15 ஆம் திகதி ஆணைக்குழுவுக்கு வருகைதருமாறு அழைப்புவிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு, எம்மால் கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் உள்ளடங்கிய அறிக்கையை வெகுவிரைவில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

அதேபோன்று இவ்விடயத்துடன் தொடர்புடைய சகல அரச கட்டமைப்புக்களும் அவற்றின் பணிகளை உரியவாறு ஆற்றியிருக்கின்றனவா என்பது குறித்தும், யாரேனும் அம்மாணவியின் அடிப்படை உரிமைகளை மீறியிருக்கிறார்களா அல்லது சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டிருக்கிறார்களா என்பது குறித்து ஆராய்வோம். அத்தகைய சம்பவங்கள் பதிவாகியிருப்பின், அதுபற்றி உரிய தரப்பினர் பொறுப்புக்கூறவேண்டும்.

அதுமாத்திரமன்றி எதிர்வருங்காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்வதற்கு கல்வி அமைச்சு உள்ளிட்ட கட்டமைப்புக்களால் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நாம் விசேட அவதானம் செலுத்தியுள்ளோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.