நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதி பதியாக இருந்த ஜே. ஆர். ஜயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் இடம் பெற்ற கிழக்கு மாகாணத்தில் மிகப்பாரிய இனப்படுகொலை கொக்கட்டிச்சோலை படுகொலையாகும். இது தொடர்பாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு உட்பட சர்வ தேச சமூகம் இலங்கை அரசு மீது அவ்வேளை வன்மையான கண்டனத்தை வெளியிட்டிருந்த படுகொலையின் 39 வது ஆண்டு நினைவு கடந்த 2026 ஜனவரி 28 நாள் வழமை போன்று அந்த நினைவுத்தூபி அமைந்துள்ள மகிழடித்தீவு சந்தியில் நினைவு கூரப்பட்டது.
1987 ஜனவரி 28ம் நாள் அன்று அதிகாலை வடக்குப்பக்கம் வவுணதீவு பாலம் ஊடாகவும், தெற்குப்பக்கம் பட்டிருப்பு பாலம் ஊடாகவும் , மேற்குப்பக்கம் பாலையடிவட்டை வெல்லாவெளி ஊடாகவும் மூன்று முனைகளில் இராணு வப்படையணிகள் கவசவாகனம் பீரங்கி பூட்டிய வாகனங் களுடன் படுவான்கரைபெருநிலத்தை்நோக்கி நகர்ந்து வேட்டுக்களை தீர்த்த வண்ணம் பிரதான சந்திகளில் இராணுவத்தை இறக்கி அந்த வீதிகளில் சென்றவர்கள் மீது வயல்களில் வேலை செய்தவர்கள் மீதும் துப்பாக்கி சூடுகளை நடத்தியவண்ணம் பேரிரச்சலுடன் வட்டம் இட்டன.
இதனால் அச்சத்தால் முனைக்காடு, முதலைக்குடா, மகிழடித்தீவு, பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை பகுதிகளை சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் பெரியவர்கள் எல்லோரும் தமக்கு பாதுகாப்பு அரணாக முதலைக்குடா வாவியை அண்டிய அமரிக்கன் நிறுவனத்தின் அணு சரணையுடன் இயங்கிய “இறால்வளர்ப்பு பண்ணை” யில் தஞ்சம் அடைந்தனர்.
அந்த பண்ணையில் தொழில் புரியும் அலுவலர்கள், ஊழியர்களும் அங்கு சமூகமாய் இருந்தனர். வயல்களில் அறுவடை செய்தவர்கள் வீதியால் சென்றவர்கள் என பலபேரை கண்ட கண்ட இடத்தில் சுட்டுக் கொலை செய்த வண்ணம் கோர முகத்துடன் மணற்பிட்டி சந்தியை கடந்து கொக்கட்டிச்சோலை ஊரை அண்டியதும் அங்கு பிரபல தனியார் வைத்தியசாலையை நடத்திவரும் வைத்திய கலாநிதி கந்தையா என்ற பெரியவர் படையினருடன் ஆங்கிலத்தில் உரையாடியபோது அவரையும் அவரின் இளைய மகனையும் அதே இடத்தில் சுட்டுக் கொலை செய்து விட்டு ஈற்றில் இறால் பண்ணைக்கு நுழைந்தவர்கள் அங்கு நின்ற அனைவரையும் சுட்டுக்கொன்றனர்.
அன்று மாலைநேரம் இரால் பண்ணையில் இறந்தவர்களின் உடலங்களை ஒவ்வொன்றாக உழவு இயந்திரத்தில் ஏற்றி மகிழடித்தீவு சந்தியில் வேலிக்கட்டை களை அடுக்குவது போன்று பரப்பில் வைத்து அவர்களில் சிலர் கைகளில் அணிந்திருந்த மோதிரம் மற்றும் சட்டை பைகளில் இருந்த பணம் பொருட்களை எடுத்துவிட்டு மீண்டும் உழவு இயந்திரங்களில் உடலங்களை ஏற்றி அம்பிளாந்துறை தாமரைப்பூ சந்தி முருகன் கோயிலுக்கு முன் குவித்து பக்கத்தில் இருந்த ஒலை வீட்டு கூரையை பிரித்து சடலங்களுக்கு மேல் போட்டு பெற்றோல் தெளித்து எரிக்கப்படனர்.
இந்த படுகொலையில் இரால் வளர்ப்பு பண் ணையில் மட்டும் 87,தமிழர்களும், இறால் வளர்ப்பு தவிர்ந்த படுவான்கரை பெருநிலம் ஊர் வயல் வாடி கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் பலர் கொலை செய்யப்பட்டனர்.
இந்த படுகொலை தொடர்பாக சுதந்திரமான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என மட்டக்களப்பு பிரஜைகள் குழு கோரிய போதிலும் அதனை அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையி லான அரசு நிராகரித்திருந்திருந்தது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது.
இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக சர்வ தேச மனித உரிமைகள் அமைப்பு உட்பட சர்வதேச சமூகம் இலங்கை அரசு மீது அவ்வேளை வன்மையான கண்டன த்தை வெளியிட்டிருந்தன. இதன் பின்னர் செரன்டிப் நிறுவனம் தமது இறால் பண்ணை தொழிலாளர்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக அமெரிக்க வொஷிங்டன் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இச்சம்பவங்களின் நேரடி சாட்சிகளை அமெரிக் காவிற்கு அழைத்து சென்று சாட்சி சொல்ல வைத்தனர். ஆனால் இலங்கை அரசாங்கம் இவ்வழக்கிற்கு சமூக மளிக்கவில்லை. இதில் கொல்லப்பட்டவர்கள் அனை வரும் அப்பாவி பொதுமக்கள் என்றும் அவர்களின் உறவி னர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதி மன்றம் தீர்ப்பளித்தது.
அமெரிக்க செரன்டிப் நிறுவனம், இறந்த தமது ஊழியர்களின் குடும்பங்களுக்கு மட்டும் தலா 60 ஆயிரம் ரூபா நட்ட ஈடு வழங்கியது. ஆனால் ஏனைய பொதுமக்கள் எவருக்கும் இலங்கை அரசாங்கம் இறந்தவர்களுக்கோ காயமடைந்தவர்களுக்கோ நஷ்டஈட்டை வழங்கவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தன கிழக்கு மாகாணத்தில் நடத்திய மிகப்பெரிய இன அழிப்பாக அப்போது இது பேசப்பட்டது.
சர்வதேசம் கண்டணம் மட்டுமே தெரிவித்தது. எந்த நீதி விசாரணையும் இலங்கையில் இல்லாமல் காலம் கடந்து இன்று 39 வருடங்கள் கடந்த நிலையிலும் அதற்கான சர்வதேச நீதியோ, உள்நாட்டு நீதியோ இதுவரை இல்லை.
இந்த படுகொலைச் சம்பவம் இடம் பெற்று சரியாக 14 வருடங்களின் பின்னர் 1991 ஜூன் மாதம் 12ஆம் திகதி இடம் பெற்ற மற்றுமோர் படுகொலைச் சம்பவத்தில் மகிழடித்தீவு ஊரில் அரங்கேறியது. இராணுவத்தினரால் பெண்கள், குழந்தைகள் உட்பட 152 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்த னர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த படுகொலை சம்பவத்துக்கு அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோசப் பரராசசிங்கம் சர்வதேச சமூகம் முன் மகிழடித்தீவு படுகொலையை கொண்டு சென்றதால் ஒரு ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இலங்கை அரசை சர்வதேசம் கண்டித்தது. ஆனால் எந்த நீதியும் அதற்கு கிடைக்கவில்லை.
1987 ஜனவரி 28 ம் திகதி இடம்பெற்ற கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1992 ஜுன் 12ம் திகதி இடம்பெற்ற மகிழடித்தீவுப் படுகொலைகள் நினவாகவே 2000ஆம் ஆண்டு மகிழடித்தீவுச் சந்தியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் நினைவுத்தூபி அமைக்கப்பட்டது.
இந்த தூபியில் உயிர் நீத்த எல்லோரினதும் பெயர்கள் அதில் இடம் பெறாவிட்டாலும் அந்த காலப்பகுதி யில் கிடைத்த பெயர்கள் மட்டும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. 1987 முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தன தொடங்கிவைத்த தமிழின அழிப்பு அவருக்கு பின்னர் ஜனாதிபதிகளாக இருந்த ஆர். பிரமதாச, விஜயதுங்க, சந்திரிகா, மகிந்த, மைத்திரி, கோட்டா, ரணில் வரை நீண்டு சென்று தற்போதைய ஜனாதிபதி அநுராவரை கட்டமைக்கப்பட்ட இனவழிப்பாக தொடர்வதைக் காணலாம்.
யார் ஆட்சியில் அமர்ந்தாலும் இலங்கையிலும் நீதி யில்லை, சர்வதேசத்திலும் நீதி கிடைக்காத இனமாகவே தமிழ் இனம் உள்ளது.



