கேள்விக்குறியாகும் பிரதிநிதித்துவம்-துரைசாமி நடராஜா

இலங்கையின் பத்தாவது பொதுத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14 ம் திகதி இடம் பெறவுள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. இதேவேளை அரசியல் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் இத்தேர்தலில் உச்சகட்ட ஆசனங்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் பல்வேறு முன்னெடுப்புக்களையும், தேர்தல் பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் மலையக கட்சிகள் உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகள் இத்தேர்தலுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்கும் நோக்கில் வியூகங்கள் பலவற்றையும் வகுத்து செயற்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது. எனினும் இக்கட்சி களுக்கு உள்ளேயும் வெளியேயும் காணப்படும் முரண்பாடுகள், சச்சரவுகள் சிறுபான்மை பிரதி நிதித்துவத்தை கேள்விக் குறியாக்கிவிடுமோ என்ற  இயல்பான அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த மாதம் ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி யின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க 57 இலட்சத்து 40 ஆயிரத்து 179 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளார். இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 42.31 வீதம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஜனாதிபதியின் இவ்வெற்றி தொடர்பில் சர்வதேச நாடுகளும் தங்களின் வாழ்த்துக்களை ஜனாதிபதிக்கு தெரிவித்துக் கொண்டிருந்தன. நாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற நேர்மையான ஆட்சிக்கு ஜனாதிபதி தலைமையிலான ஆட்சி வழிவகுக் கும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ‘கனவை முழுமை யாகவே யதார்த்தபூர்வமானதாக அமைத்துக் கொள்வதற்காக இந்த மண்ணுக்கு புத்தம் புதிய ஆரம்பமொன்று அவசியமாகும். சிங்கள, தமிழ், முஸ்லிம்களாகிய எம்மனைவரதும் ஒன்று சேர்ந்த வலிமை ஆரம்பிக்கின்ற யுகத்தின் அடிக்கல்லாக அமையும். அதன் மீதுதான் புதிய மறுமலர்ச்சி யுகம் கட்டியெழுப்பப்படும். வாருங்கள் நாங்கள் அதற்காக கை கோர்த்துக் கொள்வோம்’ என்று ஜனாதிபதி அநுரகுமார நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மூன்றில் இரண்டு

ஜனாதிபதி தேர்தலின் சூடு தணியுமுன்னரே பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர் தலுக்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. இதனடிப்படையில் அடுத்த மாதம் 14 ம் திகதி பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலும் நிறைவடைந்துள்ளது.  இதேவேளை பொதுத்தேர்தலைத் தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளமையும் தெரிந்ததேயாகும். பொதுத்தேர்தலில் அதிகரித்த ஆசனங் களைக் கைப்பற்றி ஆட்சியமைக்கும் நோக்கில் பெரும்பான்மைக் கட்சிகள் முழுமூச்சுடன் களமிறங்கியுள்ளன. இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி இத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளும் நோக்கில் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருவதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கருத்து தெரிவித்தார். ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தவும் நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உந்துசக்தியாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். எதிர்வரும் பொதுத்தேர்தலில் இளைஞர் மற்றும் பெண்கள் அதிகமாக உள்ளீர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை பெப்ரல் அமைப்பு ஆழமாக வலியுறுத்தி இருந்த நிலையில் இத்தேர்தலில் இம்முறை புதுமுகங்கள் பல வெற்றிபெறக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் முன்னைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் படுதோல்வியடையக்கூடுமென்றும் அரசியல் விமர்சகர்கள் எதிர்வு கூறியுள்ளனர். இதேவேளை கடந்த பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த பலர் இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றும் நோக் கில் பெரும்பான்மைக் கட்சிகள் முனைப்புடன் செயற்பட்டு வரும் நிலையில்  மலையக கட்சிகள் உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகளும் இதற்கு ஈடாக பிரதிநிதித்துவ அதிகரிப்பில் கவனம் செலுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. எனினும் இக்கட்சிகளிடையே இப்போக்கு காணப்படுவதாக தெரியவில்லை. சமூக நலன்களைக் காட்டிலும் சுய நலன்கள் தொடர்பி லேயே இக்கட்சிகள் அதிகமாக ஆர்வம் செலுத்துகின்றன. மக்களின் நலன்களுக்காக தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமே தவிர தனிநபர்களின் வளர்ச்சிக்காக மட்டுமே கட்சிகள் முடிவுகளை மேற்கொள்வதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

வடபகுதியில் தமிழ்க் கட்சிகள் இன்று நாலாறாகப் பிரிந்து பாராளுமன்ற பிரதிநிதித்து வத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றன. தமிழரசுக் கட்சி சார்பில் பெயரிடப்பட்ட வேட்பாளர் தொடர்பில் அதிருப்தி மேலெழுந்த நிலையில் இக்கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா கட்சியிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில் இம்முறை தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களை தெரிவுசெய் வதற்கான செயன்முறையொன்று நியமனக் குழுவினால் வகுக்கப்பட்டு, அதற்கு அமை வாகவே வேட்பாளர் தெரிவு இடம்பெற்றதாக கட்சியின் பொதுச் செயலாளர் பா.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். முஸ்லிம் கட்சிகளும் பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்படுவதாக இல்லை.தமக்குள்ளே பிளவுகள் பலவற்றையும் வளர்த்துக் கொண்டு பிரிந்து செயற்படும் ஒரு போக்கே அங்கும் காணப்படுகின்றது.

மேலெழும்பும் கண்டனம்

அரசியல் பிரதிநிதித்துவம் என்பது ஒவ்வொரு சமூகத்தின் மேலெழும்புகைக்கும் அடிப் படையாக அமைகின்றது. இவ்வரசியல் பிரதி நிதித்துவங்கள் வெறுமனே நாற்காலிகளை சூடேற்றும் பிரதிநிதித்துவங்களாக அமையுமா னால் அதனால்எவ்விதமான நன்மையும் ஏற் படப்போவதில்லை. மறுதலையாக அர்த்தமுள்ள அரசியல் பிரதிநிதித்துவங்களின் செயற்பாடுகள் சமூக அபிவிருத்திக்கு வலுசேர்ப்பதாக அமைவதோடு அம்மக்களின் தேசிய நீரோட்டக் கனவையும் மெய்ப்பிப்பதாக அமையும் என் பதை மறுப்பதற்கில்லை. இந்த வகையில் அர்த்தமுள்ள அரசியல் பிரதிநிதித்துவங்கள் உலகளாவிய ரீதியில் பின்தங்கிய சமூகங்கள் பலவும் மேலெழும்புவதற்கு வலு சேர்த்துள்ளன என்பதே உண்மையாகும் .

இந்தவகையில் இலங்கையில் இன்னும் பல உரிமைகளையும் அடைந்துகொள்ள வேண்டிய சமூகம் என்ற வகையில் மலையக சமூகத்தை குறிப்பிட்டுக் கூறுதல் வேண்டும். 1948ம் ஆண்டு பிரசாவுரிமை மற்றும் வாக்குரிமை என்பன ஐக்கிய தேசியக் கட்சியினால் பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து இச்சமூகத்தின் அபிவிருத்தி கானல் நீரானது. அரசியல்வாதிகள் மழைக்குக் கூட லயத்தில் ஒதுங்குவதற்கு முன்வரவில்லை. இந்நிலையில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் தனியொரு வராக பாராளுமன்றத்தில் இருந்து மலையக மக்களின் நல் வாழ்வுக்காக குரல் கொடுத்ததை யும் இங்கு நினைவுகூற வேண்டும். அவரின் தனித்துவமான செயற்பாடுகள் பெரும் பான்மை அரசியல்வாதிகள் மற்றும் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. இலங்கை யின் பாராளுமன்றத்திலும் அரசியல் களத்திலும் மலையக பிரதிநிதிகள் பலர் உள்ளீர்க்கப் படுவதற்கு தொண்டமான் காரண கர்த்தாவாக விளங்கினார். இத்தகைய விடயங்களை மையப் படுத்தி ‘தனிமரம் தோப்பான விந்தையை அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானில் கண்டேன் ‘ என்று பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி ஆர்.சோபனாதேவி தெரிவித்திருப்பதும் மிகவும் பொருத்தமானதேயாகும்.

இந்திய வம்சாவளி மக்களின் பறிக்கப் பட்ட பிரசாவுரிமை மற்றும் வாக்குரிமை என்பவற்றை மீண்டும் ஐ.தே.க வழங்கி தான் முன்னர் செய்த பாவத்துக்கு பிராயச்சித்தம் தேடிக் கொண்ட நிலையில் இந்நிலை காரணமாக எம்மவர்களில் பலர் மாகாண சபை, உள்ளூராட்சி சபை, பாராளுமன்றம் என்று பல நிலைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு கிடைத்தது. அத்தோடு பேரம் பேசும் சக்தியை மையப்படுத்தி உரிமைகள் மற்றும் சலுகைகள் சிலவும் மலையக மக்களுக்காக பெற்றுக் கொடுக்கப்பட்டன. அரச தொழில்வாய்ப்புகள், உட்கட்டமைப்பு அபிவிருத்தி என்பனவற்றில் முன்னேற்றம் காணப்படுவதற்கு அரசியல் பிரதிநிதித்துவம் வலு சேர்த்திருந்தது. பேரம் பேசும் சக்திக்கு ஐக்கியமே அடிப்படையாக அமைந்த நிலையில் இச்சக்தியின் ஊடாக இன்னும் பல சாதக விளைவுகளையும் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு காணப்பட்ட போதும் அது சாத்தியப்படாமல் போனமை குறித்து தொடர்ச்சியாக கண்டனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எது எப்படியான போதும் அரசியல் பிரதிநிதித்துவம் இம்மக்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு வழிசமைத்தது என்றால் மிகையாகாது. நிலைமை இவ் வாறிருக்கையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் மலையக அரசியல் பிரதிநிதித்துவம் கேள்விக்குறியாகிவிடுமோ என்றதொரு அச்சம் மேலோங்கி வருகின்றது. நாட்டின் ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலை யில் அக்கட்சிக்கான அலை மேலெழுந்து வருகின்றது. இந்நிலையில் பெரும்பான்மை கட்சிகளே திக்குமுக்காடிப் போயிருக்கின்றன. இதனிடையே மலையக கட்சிகள் உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகள் நிதானப்போக்கினை கடைபிடிக்க வேண்டிய  அவசியமுள்ளது. எனினும் இக்கட்சிகள் இதனை கண்டுகொள்வ தாக இல்லை.

பாரத் அருள்சாமி

இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து பாரத் அருள்சாமி வெளியேறி தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக தேர்தலில் களமிறங்கியுள்ளார். மேலும் மக்களின் நலனுக்காகவே கட்சி தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமே தவிர தனிநபர்களின் வளர்ச்சிக்காக மாத்திரமே கட்சி முடிவுகளை எடுக்கக்கூடாது என்றும் பாரத் தெரிவித்திருக்கின்றார். பதுளை பிரதேச இ.தொ.கா.வின் உபதலைவர் சிவலிங்கமும் கட்சியில் இருந்து விலகி இருக்கின்றார். இந்நிலையில் இ.தொ.கா. இத்தேர்தலில் எவ்வாறு காய் நகர்த்தலை மேற்கொண்டு வெற்றி பெறப் போகின்றது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இதேவேளை தமிழ் முற்போக்கு கூட்டணி கொழும்பு,கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி,கேகாலை, கண்டி, நுவரெலியா, பதுளை போன்ற பல இடங்களில் போட்டியிடு கின்றது. நுவரெலியா மாவட்டத்தில் கூட்டணி யின் சார்பில் திகாம்பரம், உதயகுமார், இராதா கிருஸ்ணன் ஆகியோர் கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இம்முறை தேர்தலிலும் இவர்கள் போட்டியிடும் நிலையில் சவால்களுக்கு மத்தியில் இம்மூவரின் வெற்றியும் எவ்வாறு அமையப் போகின்றது என்பதை விழிப்புடன் பலரும் நோக்குகின்றனர்.

பதுளை, கண்டி உள்ளிட்ட இடங்களிலும் தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு பகீரதப் பிரயணத்தில் ஈடுபட வேண்டியுள்ளது. கண்டி மாவட்டத்தில் கடந்தகால தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட வேலு குமார் பாராளு மன்றத்திற்கு தெரிவாகியிருந்தார். எனினும் இம்முறை அவர் கட்சித் தாவலில் ஈடுபட்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் கரங்களை பலப்படுத்தி இருந்தார். ஏற்கனவே எஸ். இராஜரட்ணம் கண்டி மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதியாக இருந்து அர்ப்பணிப்புடன் உச்சகட்ட சேவையாற்றி இருந்தமையும் நீங்கள் அறிந்ததேயாகும்.

இணக்கப்பாடில்லை

மலையக கட்சிகள் உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகள் அரசியலில் கோலோச்சி மக்களுக்கு சேவைகளை பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவை உள்ள நிலையில் இக்கட்சிகளின் இணக்கப்பாடற்ற, தூரநோக்கற்ற செயற்பாடுகள் எதிர்காலத்தை சிந்திக்க வைத்துள்ளன. இதனிடையே சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை மழுங்கடிக்கும் அல்லது வேரறுக்கும் நோக்கில் நுவரெலியா உள்ளிட்ட பல மாவட்டங்களில் சுயேச்சை குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வாக்குச் சிதறல்கள் ஏற்படும் நிலையில் அதுவும் சிறுபான்மை கட்சிகளுக்கு பாதகமாகவே அமையும்.

தற்போது நடைமுறையிலுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை சிறுபான்மை மக்களுக்கு சாதகமானதாக கருதப்படுகின்றது. எனினும் தேசிய மக்கள் சக்தி புதிய அரசியல மைப்பை முன் வைக்கப் போவதாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தியுள்ள நிலை யில் தேர்தல் முறைமை உள்ளிட்ட பல மாற்றங்கள் இதனால் ஏற்படும். இந்நிலையில் தற்போது நடைமுறையிலுள்ள விகிதாசார தேர்தல் முறைமையின் ஊடாக இடம்பெறும் இறுதி பொதுத்தேர்தலாகக் கூட இத்தேர்தல் அமையலாம். இதுவும் சிறுபான்மையினருக்கு பாதகமானதேயாகும்.

இவைகளை கருத்தில் கொண்டு நோக்கு

கையில் சிறுபான்மையினரின் அரசியல் எதிர் காலம் சூனியம் மிக்கதாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் மலையக கட்சிகள் இதனைப் புரிந்துகொண்டு தங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்துவிட்டு மக்களின் நலன்கருதி பொது இணக்கப்பாடுடன் செயற்படுதல் வேண்டும்.இல்லையேல் இனவாதிகள் இம்மக்களை விழுங்கி ஏப்பம் விட்டு விடுவது திண்ணமாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.