முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவு பகுதியில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (30) இரண்டாவது கட்டத்தின் 37வது நாளை எட்டியுள்ளது.
கேப்பாப்பிலவு பகுதியில் 55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகளும், மேலும் 4 குடும்பங்களுக்கு சொந்தமான 100 ஏக்கர் மத்திய வகுப்புக் காணிகளும் இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டிலே உள்ளது.
தமக்குச் சொந்தமான காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் தொடர்ச்சியாக அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தமது பூர்வீக வாழ்விடங்களில் மீளக் குடியேறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்தி, காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாகும்
போராட்டம் 37வது நாளைக் கடந்துள்ள போதிலும் இதுவரை அதிகாரிகளிடமிருந்து எவ்வித நிரந்தரத் தீர்வும் எட்டப்படாத நிலையில் , போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, எமது நியாயமான கோரிக்கைகளை ஏற்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் இவ்விடத்திற்கு வருகை தருவதாக உறுதியளித்திருப்பதாக குறிப்பிட்டனர்
“அவரின் வருகைக்காக நாம் காத்திருக்கின்றோம். அவர் எமது காணிவிடுவிப்பு தொடர்பாக ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்பார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. எனவே எமது சாத்வீகமான போராட்டத்திற்கு செவிசாய்த்தமைக்கு அவருக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்” என்று போராட்டத்தில் ஈடுபடும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.



