கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனின் சாரதி முல்லைத்தீவு – கேப்பாபிலவு மீனவ சங்க தலைவர் ஒருவரை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிப்படுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தினார்.
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நேற்றைய தினம் தேர்தல் பிரச்சாரத்திற்காக முல்லைத்தீவு – கேப்பாபிலவிற்கு சென்றுள்ளார்.
இதன்போது அங்குள்ள மீனவ சங்கத் தலைவரை அழைத்து அவரது வீட்டுக்கு வெளியே வைத்து அவருடன் கலந்துரையாடியுள்ளார். இதன்போது அந்த மீனவர் சங்கத் தலைவர் தாங்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகளை கூறியதுடன், இந்த பிரச்சினை குறித்து கடந்த காலங்களில் பதவியில் இருந்து அமைச்சர்களிடம் தெரிவித்த நிலையில் அவர்களும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அத்துடன் அமைச்சர் சந்திரசேகரன் கருத்து தெரிவிக்க முயன்றபோது குறித்த கடற்றொழில் சங்க தலைவர், நந்தி கடலுக்கு செல்லும் வீதியின் நிலையை காண்பிக்க முற்பட்டுள்ளார்.
இதன்போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனின் சாரதி உள்ளிட்டோர் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிப்படுத்தினார்.
இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இன்று (25) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் வினவப்பட்டது.
எவ்வாறாயினும் அவர் இந்த கேள்விக்கு பதிலளிக்காமல் ஊடகவியலாளர்களை புறக்கணித்து சென்றுள்ளார்.