குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தோண்டப்படுதல் வேண்டும் என்ற வழக்கு ஆகஸ்ட் 25ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில், திங்கட்கிழமை (21) மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் மற்றும் சட்டமா அதிபருக்கு, 21ம் திகதி திங்கட்கிழமை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு களுவாஞ்சிகுடி நீதிமன்றம் இந்த வழக்கில் கடந்த தவணையின் போது, கட்டளை பிறப்பித்திருந்தது.
எனினும் இந்த வழக்கு திங்கட்கிழமை (21) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபரை பிரதி நிதித்துவப்படுத்தி எவரும் ஆஜராகி இருக்க வில்லை. எனினும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் இருந்து இரண்டு சட்டத்தரணிகள் ஆஜாராகி சமர்ப்பணங்களை முன் வைத்தனர்.
அவர்கள், களுவாஞ்சிகுடி நீதிமன்றத்துக்கு காணாமல் போனோர் அலுவலகத்தினால் ஒரு விரிவான கடிதத்தினை ஏற்கனவே அனுப்பி இருந்ததாகவும் குருக்கள் மடம் மனித புதை குழி தோண்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருப்பதாகவும் அதே நிலைப்பாட்டிலேயே தற்போதும் இருப்பதாகவும் கூறினார்கள்.
இவற்றை செவிமடுத்த நீதிபதி ஏற்கனவே திட்ட வரைபு ஒன்று சட்ட வைத்திய அதிகாரியினால் நீதி மன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு இருந்தது என்று சுட்டிக்காட்டினார். அது 2020ம் ஆண்டு சமர்பிக்கப்பட்டதால் கால மாற்றத்தினால் அதை மீளாய்வு செய்து மீள அந்த திட்ட வரைவை நீதிமன்றத்துக்கு அடுத்த தவணையின் போது சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதவான் கட்டளையிட்டார்.
அத்துடன் அடுத்த தவனையான 25.08.2025ம் திகதி சட்டமா அதிபரை ஆஜராகுமாறு கட்டளையிட்ட நீதவான் இந்த வழக்கை அந்த திகதிக்கு ஒத்தி வைத்தார். குறித்த இவ் வழக்கில் முறைப்பாட்டாளரான அப்துல் மஜீத் அப்துர் ரஊப் நீதிமன்றத்தில் பிரசன்னமாகி இருந்ததுடன் அவரின் சார்பில் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.
12.071990 ஆம் திகதி புனித ஹஜ் கடமையை நிறைவு செய்து வீடு திரும்பிய காத்தான்குடியை சேர்ந்த ஹஜ் யாத்திரிகர்கள் மற்றும் வியாபாரிகள் கல்முனை மட்டக்களப்பு வீதியில் குருக்கள்மடம் எனும் இடத்தில் கடத்திக் காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டமை தொடர்பாக பாதிக்கப்பட்ட அப்துல் மஜீத் அப்துல் ரவூப் என்பவரால் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் கடந்த 2014 ஆம் ஆண்டு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த வழக்கு இடம் பெற்று சந்தேகத்துக்கிடமான மனித புதைகுழி அமைந்துள்ளதாக நியாயமாக சந்தேகிக்கப்படும் இடத்தை தோண்டுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு மன்றுக்கு அறிக்கையிடுமாறு உரிய அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கட்டளையாக்கி இருந்த நிலையில் 04.10.2020ல் சட்டமா அதிபரினால் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைவாக குறித்த வழக்கானது கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இப்பின்னணியிலேயே இவ்வழக்கின் முறைப்பாட்டாளர் அப்துல் மஜீத் அப்துர் ரவூப் என்பவரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக 11.07.2025ந் திகதியாகிய வெள்ளிக்கிழமை குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணியால் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரத்தை சமர்ப்பித்தனர். அந்த வழக்கானது திறந்த மன்றில் மீள எடுத்துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.