கிழக்கில் தமிழர்களுக்கு போராட்டம் நிறைந்த ஆண்டாக முடிந்த 2023 – மட்டுநகரான்

ஆண்டுகள் மறைந்தாலும் தமிழர் தேசத்தில் தமிழர்களுக்கான விடிவுகள் என்பது இல்லாமலே ஒவ்வொரு ஆண்டும் மறைந்துசெல்கின்றது.தமிழர்களின் விடுதலைப்போராட்டமும் அவர்களின் வாழ்வியலும் நாளுக்கு நாள் கேள்விக்குட்படுத்தப்பட்டுவரும் நிலையிலேயே ஆண்டுகள் கடந்துசெல்கின்றது.
வடகிழக்கு தமிழர்கள் அடுத்து ஆண்டு மலர்வதையும் ஏதோவொரு நம்பிக்கையுடனேயே எதிர்கொள்ளும் நிலைமையிருக்கின்றது.அடுத்த ஆண்டாவது எங்களது வாழ்வில் ஒளியேற்றப்படும் நிலைமையேற்படவேண்டும் என்பதே அவர்களின் நிலையான வேண்டுதலாகயிருந்துவருகின்றது.

இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாணத்தில் புதிய ஆண்டை ஏதோவொரு நம்பிக்கையில் வரவேற்க தயாராகிவரும் நிலையில் கடந்த நாட்களில் தங்களுக்கு நேர்ந்த அனைத்து துன்பங்களும் நீங்கி தாங்கள் சுதந்திரமாகம் அனைத்து உரிமைகளையும் பெற்று எதிர்வரும் ஆண்டிலாவது வாழவேண்டும் என்று பிரார்த்தனை செய்துவருகின்றனர்.

Batti HR Day கிழக்கில் தமிழர்களுக்கு போராட்டம் நிறைந்த ஆண்டாக முடிந்த 2023 - மட்டுநகரான்கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் இந்த ஆண்டு பல துன்பங்களை சுமந்த நிலையிலேயே புதிய ஆண்டினை வரவேற்பதற்காக தயாராகிவருகின்றது.பௌத்த மயமாக்கல் என்னும் கொடிய ஆயுதம் கொண்டு தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டுவரும் நிலையில் அதற்கு எதிரான போராடிவரும் நிலையிலேயே புதிய ஆண்டில் இந்த போராட்டத்தினையும் முன்கொண்டுசெல்லும் எண்ணப்பாட்டுடன் புதிய ஆண்டியை எதிர்கொள்வதற்கு கிழக்கு தமிழர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.

இந்த ஆண்டு இந்த நாட்டில் தமிழர்கள் அடக்கப்பட்ட இனமாகவும் இருள்சூழ்ந்த இனமாகவும் வாழ்கின்றார்கள் என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டும் வகையில் இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு சுதந்திர தினமாக மட்டக்களப்பு மக்கள் அனுஸ்டித்ததுடன் இலங்கை சுதந்திர தினத்தன்று தமிழர்களின் உரிமையினை வலியுறுத்தி போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

இலங்கையில் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில், யுத்த வலயத்துக்கு உள்ளும் பின்னர் அகதி முகாம்களிலும் மக்கள் பேரழிவைச் சந்தித்துக் கொண்டிருந்த காலப்பகுதியில், இரண்டு கொம்பன் யானைகளைப் பற்றி, தெற்கில் உள்ள அரசியல்வாதிகள் கவலைப்பட்டுக் கொண்டிருந்த விடயம் நினைவிருக்கலாம்.அவ்வாறான நிலையிலேயே இன்று தமிழர்களின் துன்பங்களின்போது தெற்கில் வேறுவிதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சமாதானம் தொடர்பிலும் இன சமத்துவம் பேசுகின்ற உலக நாடுகளும் நடுநிலைமை பற்றி வகுப்பெடுக்கின்ற அமைப்புகளும், அதற்கெதிராக உலகில் நடைபெறுகின்ற பல சம்பவங்களை ஒரு குறிப்பிட்ட தருணம் வரைக்கும் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கின்றன.

குறிப்பாக கிழக்கில் இந்த ஆண்டு நடைபெற்ற பல தமிழ்பேசும் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் இதுவரையில் சிங்கள தேசம் தனது வேட்டையை கட்டுக்கடங்காமல் செய்துள்ளது.ஆனால் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக சர்வதேசம் மௌனமாகவேயிருந்துவருகின்றது.

இது தமிழ் பேசும் மக்கள் தொடர்ச்சியாக சர்வதேசம் தொடர்பான அதிர்ப்தியை கொண்டிருக்கும் நிலையினை காணமுடிகின்றது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் அத்துமீறிய காணி அபகரிப்பு செயற்பாடுகள் தீவிரமடையும் நிலை ஏற்பட்டு அது இன்று வரையில் இடம்பெற்றுவருகின்றது.

batti catt கிழக்கில் தமிழர்களுக்கு போராட்டம் நிறைந்த ஆண்டாக முடிந்த 2023 - மட்டுநகரான்திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை நகர்,புல்மோட்டை, கிண்ணியா, குச்சவெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் புத்த பிக்குகளின் தலைமையில் பாரியளவிலான காணி அபகரிப்புகள் முன்னெடுக்கப்பட்டன.பௌத்த விகாரை அமைத்தல் அதற்கு காணி வேண்டும் என்று தனியார்,அரச காணிகளை அத்துமீறி அபகரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அதனை தடுப்பதற்கு தமிழ் பேசும் மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய அவலம் காணப்படுகின்றது

.
இதேபோன்று இலங்கையின் தமிழர்களின் அடையாளமாகவும் பாரம்பரியமாகவும் இருக்கும் கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியை பௌத்தத்திற்கு சொந்தமானது என அறிவித்துள்ள இலங்கையின் தொல்லியல் திணைக்களம் அங்கு தமிழர்களின் அடையாளத்தை சிதைக்கும் முயற்சிகளை முன்னெடுத்துவரும் நிலையில் அதனை தடுப்பதற்கு பல்வேறு வழிகளில் தமிழர்கள் போராடிவருகின்றனா. இதுபோன்று திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் விகாரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது தமிழர்கள் அதற்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தனர்.

நூறு வீதம் தமிழர்கள் வாழும் இலுப்பைக்குளம் பகுதியில் தென்னிலங்கையிலிருந்து வகைதந்த புத்த பிக்குகள் விகாரை அமைக்க முற்பட்ட அதேநேரம் விகாரை அமைப்பதை தடுத்தற்காக மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தையே நடாத்தமுடியாத வகையில் புத்த பிக்குகள் அராஜகம் செய்தனர்.

திருகோணமலையில் இவ்வாறு பௌத்த பிக்குகள் ஒருபுறம் தமது அராஜகங்களை முன்னெடுத்துள்ள நிலையில் சீனா,அமெரிக்கா,இந்தியா போன்ற நாடுகள் இங்கு தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுக்காமல் திருகோணமலையில் தமது இருப்புகளை தக்கவைப்பதற்கான முயற்சிகளையே முன்னெடுத்துவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலும் இதே ரீதியான பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.இந்த ஆண்டு மீண்டும் மயிலத்தமடு,மாதவனை பிரச்சினை பூதாகரமாக தோற்றம்பெற்றது.கடந்த காலத்தில் நீதிமன்ற உத்தரவுடன் வெளியேற்ற சிங்கள அத்துமீறிய குடியேற்றவாசிகள் மீண்டும் ஆக்கிரமிப்புகளை முன்னெடுத்த நிலையில் அவர்களுக்கு நீதிமன்றங்கள் ஊடாகவும் ஆர்ப்பாட்டங்கள் ஊடாகவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதிலும் இன்றுவரையில் தீர்வுகாணப்படாத விடயமாகவேயிருந்துவருகின்றது.

batti monk 161116 seithy 3 கிழக்கில் தமிழர்களுக்கு போராட்டம் நிறைந்த ஆண்டாக முடிந்த 2023 - மட்டுநகரான்இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலும் கடந்த பெப்ரவரி மாதம் கால்நடை பண்ணையாளர்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களைக்கொண்டு முந்திரிகை செய்கை என்ற பெயரில் சிங்கள ஆக்கிரமிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோது அதற்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்த முயற்சிகள் காரணமாக ஒரு பகுதி காணி விடுவிக்கப்பட்டபோதும் சுமார் 200ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பண்ணையாளர்களின் காணிகளும் பறிக்கப்படுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்பட்டு அந்த முயற்சிகள் தடுக்கப்பட்டன.
இதேபோன்று வாகரை பிரதேசத்தில் இல்மனைற் தொழிற்சாலை அமைப்பதற்காக தென்பகுதியை சேர்ந்தவர்களுக்கு கதிரவெளி கடற்கரை பகுதியை தாரைவார்க்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்ட செயலயகத்தினை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடாத்திய நிலையில் அந்த நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

வடகிழக்கில் உள்ள விவசாயிகள் இந்த அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டுவருகின்றமை தொடர்பிலும் வடகிழக்கு விவசாயிகளின் நிலைமையினை சர்வதேசம் அறியும் வகையில் ஏப்ரல் தொடக்கம் தொடர்ச்சியான போராட்டங்கிள கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் விவசாயிகள் முன்னெடுத்திருந்தனர்.தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்படுவதுடன் தமிழர்களின் பொருளாதாரத்தினையும் இந்த அரசாங்கம் பறிக்கமுனைவதாக தெரிவித்து இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையிலேயே மீண்டும் மயிலத்தமடு,மாதவனை பகுதியில் கால்நடை பண்ணையாளர்களின் காணிகள் திட்டமிட்ட வகையில் சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகள் அபகரிக்கும் நடவடிக்கைகளை தடுத்துநிறுத்துமாறும் தமது காணிகளை பாதுகாக்குமாறு கோரியும் மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையளார்கள் தொடர்ச்சியான போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.
இந்த போராட்டத்தினை அடக்குவதற்கு சிங்கள தேசம் பல்வேறு உத்திகளை முன்னெடுத்தபோதிலும் அனைத்தையும் தாண்டிய வகையில் 105நாட்களையும் தாண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய பல்கலைக்கழக மாணவர்களை கைதுசெய்து அவர்களின் குரல் வளைகளைநசுக்கும் செயற்பாடுகளையும் பண்ணையாளர்களுக்கு ஆதரவாக செயற்படும் ஊடகவியலாளர்களையும் சமூக செயற்பாட்டாளர்களையும் ஒதுங்க செய்வதற்கு பல்வேறு உத்திகள் கையாளப்பட்டுவரும் நிலையில் பண்ணையாளர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது

.
கிழக்கில் இன மோதல்களையும் மத மோதல்களையும் ஏற்படுத்தி தமிழர்களின் இருப்பினை கேள்விக்குட்படுத்தும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் நிலையிலும் கிழக்கில் இந்த ஆண்டு தமிழர்களுக்கு போராட்டம் நிறைந்த ஆண்டாகவே முடிந்திருக்கின்றது.புதிய ஆண்டும் போராட்டம் நிறைந்த ஆண்டாகவே மலரப்போகின்றது என்ற கவலையான விடயத்தினை இங்கு பதிவுசெய்து கடந்த காலத்தில் தமிழர்கள் கிழக்கில் எதிர்கொண்ட சிக்கல்கள் நீங்க வழியேற்படுத்தப்படவேண்டும் என்ற வேண்டுதலுடன் இந்த ஆண்டை பூர்த்திசெய்து புதிய ஆண்டை வரவேற்கின்றேன்.