கிழக்கில் கட்சியின் வீழ்ச்சிக்கு துரைராசசிங்கமே காரணம் – யோகேஸ்வரன் பகிரங்க குற்றச்சாட்டு

தமிழரசுக் கட்சி செயலாளர் செயல்திறனான செயலாளர் அல்ல.அவரது பதவிக்காலத்தில் கிழக்கில் கட்சி வீழ்ச்சியை சந்தித்துள்ளதென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஷ்வரன் தமிழரசுக்கட்சி பொதுச்சபை மாநாட்டில் பகிரங்கமாகவே சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மட்டக்களப்பிற்கான செயலாளராக மட்டுமே இருக்கிறார்.

கிழக்கின் ஏனைய பகுதிகளை கவனிக்கிறாரில்லை. எம்மையும் சுதந்திரமாக இயங்கவிடாமல் தடை போடுகிறார்.உள்ளூராட்சித் தேர்தலில் அவரது தொகுதியிலேயே கோட்டை விட்டார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், துரைராசசிங்கத்தை மீண்டும் ஒரு தடவை செயலாளராக நியமிக்க அனைவரும் விட்டுக் கொடுங்கள் என கேட்டமையால் சம்பந்தரின் வேண்டுகோளை எவரும் தட்டிக்கழிக்காமையால் மீண்டும் துரைராசசிங்கம் கட்சி செயலாளரானார்.

இதன்படி கட்சியின் முக்கிய பதவிகளான தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளில் மாற்றம் நடக்கவில்லை.தலைவராக மாவை.சேனாதிராசாவும், செயலாளராக கி.துரைராசசிங்கமும், பொருளாளராக கனகசபாபதியும் மூத்த துணைத் தலைவர்களாக இதுவரை இருவர் இருந்தனர். பொன் செல்வராசா, பேராசிரியர் சிற்றம்பலம் ஆகியோர்கள். இதில் சிற்றம்பலம் கட்சியை விட்டு விலகி விட்டார். அவரது வெற்றிடத்திற்கு சீ.வீ.கே.சிவஞானம் தெரிவானார்.

கட்சியின் பிரதி பொதுச் செயலாளர்களாக இதுவரை எம்.ஏ.சுமந்திரன், சீ.வீ.கே.சிவஞானம் பதவி வகித்தனர். இம்முறை புதிதாக பா.சத்தியலிங்கம், சிவஞானத்தின் வெற்றிடத்திற்காக நியமிக்கப்பட்டார்.

கட்சியின் பிரதி செயலாளர்கள் ஐவர் பதவி வகிப்பது வழக்கம். இதனடிப்படையில்யோகேஷ்வரன், பா.அரியநேத்திரன், எம்.சரவணபவன், சி.ஸ்ரீதரன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, சார்ள்ஸ் நிர்மலராஜன் ஆகியோர் தெரிவானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.