கிளிநொச்சி நகரில் 40 வீதத்திற்கும் அதிகமான காணிகளை படையினர் தொடர்ந்தும் ஆக்கிரமித்துள்ளதாக சிறிதரன் சாடல்

கிளிநொச்சி நகரில் 40 வீதத்திற்கும் அதிகமான காணிகளை படையினர் தொடர்ந்தும் ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும் அவற்றை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இன்று (16) கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் நீண்ட காலமாக மக்கள் பயன்படுத்திய காணிகள் படையினர் மற்றும் வனவள திணைக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.

குறிப்பாக ஆனைவிழுந்தான் குளத்தின் கீழான வயல் காணிகள், பள்ளிக்குடா பகுதியில் உள்ள காணிகள் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. யுத்தம் நிறைவுபெற்று இத்தனை வருடங்கள் கடந்துள்ள போதிலும் இராணுவம் இவ்வாறு காணிகளை ஆக்கிரமித்து வைத்திருப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கிளிநொச்சி மகா வித்தியாலய மைதானத்திற்கு செல்லும் பாதை உள்ளிட்ட பெருந்தொகையான காணிகளை இராணுவத்தினர் வைத்துள்ளதாகவும் இதனால் அபிவிருத்தியோ அல்லது நல்லிணக்கமோ ஏற்படாது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், குறித்த காணிகள் தொடர்பில் இராணுவ தரப்பிலிருந்து விளக்க கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  இந்தநிலையில் பாதுகாப்பு செயலாளருடனும், இராணுவ உயரதிகாரிகளுடனும் மீண்டும் கலந்துரையாடி குறித்த பாடசாலை காணியை விடுவிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.