கிளிநொச்சி: கௌதாரிமுனை மற்றும் பரமன்கிராய் பகுதிகளில் மீண்டும் மணல் கொள்ளை!

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கௌதாரிமுனை மற்றும் பரமன்கிராய் பகுதிகளில் மீண்டும் பாரிய மணல் கொள்ளை தலைதூக்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (06.08.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில்  இது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனிய வளத் திணைக்கள யாழ்ப்பாண அலுவலக பணிப்பாளர் தனது பெயர் பலகையற்ற வாகனத்தில் இரவு பகலாக அப்பகுதிகளில் நின்று மணல் அகழ்வினை முன்னெடுப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் மணல் கொள்ளையை தலைமை தாங்கிய நபரே தற்போது வடக்கிற்கு பணிப்பாளராக அனுப்பட்டுள்ளதால் பரமன்கிராய் மற்றும் கௌதாரிமுனை கிராமங்கள் இல்லாதொழிந்து போகும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது என்றும்  அனுமதிகள் உடனடியாக இடைநிறுத்தப்பட்டு மக்களது கிராமங்கள் பாதுகாக்கப்படவேண்டும். தவறுமிடத்து பூநகரி பொன்னாவெளியில் இதே கனியவளத்திணைக்கள பங்கெடுப்புடன் முன்னெடுக்கப்படவிருந்த பாரிய முருகைக்கல் அகழ்வு எவ்வாறு தடுக்கப்பட்டதோ, அதே போன்று மக்கள் வீதிகளில் களமிறங்கி பாரிய போராட்டத்தின் மூலம் அரச அலுவலகங்களை முடக்கி போராட்டங்களை முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.