காணி அபகரிப்பில் தீவிரம் காட்டும் அரசதிணைக்களங்கள் தொடர்பில் பிரதமருடன் ரவிகரன் எம்.பி கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட அரசதிணைக்களங்கள் மக்களின் காணிகளை அபகரிப்பதில் தீவிரமாகச் செயற்படுகின்றமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால், பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏ.சிபாம், தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம் உள்ளிட்ட கிராமங்கள் இதுவரை மீளக்குடியமர்த்தப்படாமல் காணப்படுகின்றமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், குறித்த கிராமங்களை உடனடியாக மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பிரதமரிடம் நடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றக் கட்டத்தொகுதியில் 23.05.2025இன்று பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் வடபகுதிக் காணப்பிரச்சினைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் தெரிவித்ததாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனஜீவரசிகள் திணைக்கம், வனவளத்திணைக்களம், தொல்லியல் திணைக்களம் என்பன மக்களுக்குரித்தான பெருமளவான காணிகளை அபகரித்துள்ள நிலமைகள் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரால் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அத்தோடு மக்கள் திருட்டுத் திணைக்களங்கள் எனச் சுட்டிக்காட்டும் அளவிற்கு, குறித்த திணைக்களங்களின் அபகரிப்பு நிலமைகள் தீவிரமாகக் காணப்படுகின்றமை தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினரால் எடுத்துக்கூறப்பட்டது.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு வனவளத் திணைக்களத்தால்மாத்திரம் மக்களுக்குரிய 02இலட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரால் தெளிவுபடுத்தப்பட்டது.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட ஏ.சி.பாம் கிராமம், கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம் ஆகிய கிராமங்கள் இதுவரை மீளக்குடியமர்த்தப்படாமல் காணப்படுகின்றமைதொடர்பிலும், குறித்த கிராமங்கள் உடனடியாக மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது பிரதமரிடம் கோரிக்கையும் விடுக்கப்பட்டது.

இக்கிராமங்களை மீளக்குடியமர்த்தத் தவறினால் அப்பகுதிக்குரிய மக்களுடன் இணைந்து குறித்த பகுதிகளைத் துப்பரவுசெய்து அப்பகுதிகளில் மக்கள் தாமே மீளக்குடியமரவேண்டிய நிலை ஏற்படுமென நாடாளுமன்ற உறுப்பினரால் தெரிவிக்கப்பட்டதுடன், அவ்வாறான நிலை ஏற்படாதவகையில் குறித்த பகுதிகளை மீளக்குடியமர்த்துவது தொடர்பில் கவனம்செலுத்துமாறும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

மேலும் ஒட்டுசுட்டான் ஏ.சிபாம் கிராமத்தை 1979ஆம் ஆண்டு இலங்கை நில அளவைத் திணைக்களம் அளவீடுசெய்து எல்லைக்கல்லிட்ட Top off pp66 இலக்க வரைபடம் இருக்கும்நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு குறித்த ஏ.சிபாம் பகுதியை தண்டுவான் ஒதுக்கக்காடு எனப் பிரகடனப்படுத்தி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமைதொடர்பில் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், குறித்த செயற்பாடு பாரதூரமான சட்டமீறல் செயற்பாடெனவும் நாடாளுமன்ற உறுப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.